சர்வதேச அளவில் இலக்கியத்திற்காகக் கொடுக்கப்படும் மதிப்புமிக்க விருது புக்கர் பரிசு. 1969ம் ஆண்டிலிருந்து இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டுக்கான புக்கர் பரிந்துரை பட்டியலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 13 புத்தகங்கள் அறிவிக்கப்பட்டன.
அதில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Pyre’ இடம்பெற்றிருக்கிறது. அனிருத்தன் வாசுதேவன் இந்நாவலை மொழிபெயர்த்திருந்தார்.
பெருமாள் முருகன் கடந்த 22 வருடங்களாகக் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, ஆய்வு நூல் , அகராதி என நவீன இலக்கியத்துக்கு அளித்திருக்கிற பங்கு அளப்பரியது. ஏற்கெனவே எழுத்துலகில் பல உயரிய விருதினைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு பெருமாள் முருகன் அனிருத்தன் வாசுதேவன் கூட்டணி சாகித்திய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருதினை மாதொருபாகன் நாவலின் மொழிபெயர்ப்பு நூலான `ஒன் பார்ட் வுமன்’ என்னும் புத்தகத்துக்கு வென்றுள்ளனர். இந்நிலையில் சர்வதேச புக்கர் பரிசின் சுருக்கப்பட்ட இறுதிப் பட்டியல் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி அறிவிக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து மே 27ம் நாள் விருது அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் இதுகுறித்துப் பேசினேன்.
பூக்குழியைத் தொடர்ந்து பல படைப்புகளில் கொங்கு வட்டாரங்களில் இருக்கும் விளிம்புநிலை மக்களின் பார்வையிலிருந்தே எழுதியிருக்கிறீர்கள்…
“இடமும், காலமும், மனிதர்களும் இல்லாமல் ஒரு சம்பவம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை. நான் வளர்ந்த கொங்கு மண்டலம் 90களின் முற்பகுதியில் தான் வளர்ச்சியைச் சந்தித்தது. ஆனால் அதற்கு முன் `மேட்டுக்காட்டு விவசாயம்’ என்னும் கடுமையான வறட்சி நிலையே நிலவியது. அதனால் விளிம்பு நிலை மனிதர்களோடு என்னால் எளிதில் பொருத்திக்கொள்ள முடிந்தது. ஆதலால் என் படைப்புகளின் வெளியும் அதன் வழி நகர்கிறது. “
புக்கர் ஜூரிகள் உங்கள் எழுத்துக்கள் கிராமங்களின் சாதிய இழிநிலை கட்டுமானங்களை அக்கு வேறாகக் காட்டுகின்றன எனத் தெரிவித்திருக்கிறார்கள்? அது குறித்து …
“காதல் மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. சாதி என்கிற விஷயம் பருப்பொருள் கிடையாது. அது எதற்கும் உதவாத வெற்றுக்கருத்து. ஆனால் அதை வைத்துக் கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். பூக்குழி நாவலில் இதை மையமாகக் கொண்டே எழுதியிருந்தேன். இரு சிறு நகரத்திலிருந்து வந்தவர்கள். வேறு வேறு வட்டார, சமூக பின்புலத்தில் இணையும் போது என்ன நடக்கிறது, கிராம மக்கள் அப்பாவிகள் என்னும் கண்ணோட்டத்தில் நீங்கி, அவர்கள் மனதில் மண்டி கிடக்கும் அழுக்கினை காட்டியுள்ளேன்.”
மேலும் பல கேள்விகளுக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் பதிலளித்துள்ள ஆனந்த விகடனின் முழு பேட்டியைப் படிக்க – “தமிழில் ஒரு நூல் இந்த இடத்தை அடைந்தது மகிழ்ச்சி!”