புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், விலைவாசியை கட்டுப்படுத்தும் வகையில், ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி, 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது குறித்து கூட்டத்திற்குப் பின் ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த பேட்டியில், ‘‘இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் 47.58 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள். மேலும் அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12,815.60 கோடி கூடுதல் செலவு ஏற்படும்’’ என தெரிவித்தார். இதே போல, உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 9.6 கோடி குடும்பங்கள் பயனடையும் என அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மேலும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ரூ.300 உயர்த்தி குவிண்டாலுக்கு ரூ.5,050 விலை நிர்ணயம் செய்யவும் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.