சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, ஆளுநருக்கு தமிழக அரசு நேற்று அனுப்பி வைத்துள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொண்டதைத் தடுக்க கடந்தாண்டு அக்டோபர் மாதம், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
அதைத்தொடர்ந்து, அக்.19-ம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தில், இதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவில் சில விளக்கங்களை ஆளுநர் கேட்டார். அதற்குஉடனடியாக பதில் அளிக்கப்பட்டது.
பின்னர், 4 மாதங்கள் கழித்து, அந்த சட்ட மசோதாவை, தமிழகஅரசுக்கு சட்டமியற்ற அதிகாரமில்லை என்று கூறி ஆளுநர் திருப்பியனுப்பினார்.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மீண்டும் நிறைவேற்றப்பட்டது. உடனடியாக மசோதா, தமிழக சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டது.
அந்த மசோதா மற்றும் ஆளுநர் கோரிய விளக்கங்கள் என அனைத்தும் நேற்று காலை தமிழக சட்டத்துறையின் மூலம் ஆளுநருக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்றுமுன்தினம் டெல்லி சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாலையில், மத்தியஉள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அப்போதுஇந்த மசோதா குறித்து விவாதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் சென்னை திரும்பியதும் மசோதா குறித்து பரிசீலிக்க வாய்ப்புள்ளது.
இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கூறப்படும் நிலையில், அவரது முடிவுமிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.