மும்பையின் தென்பகுதியில் உள்ள கிராண்ட் ரோட்டில் உள்ள பார்வதி மென்சன் என்ற கட்டடத்தில் வசித்து வருபவர் மதன்(55, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவரின் மனைவி தனது குழந்தைகளுடன் இரண்டு மாதத்திற்கு முன்பு அவரைவிட்டுவிட்டு அருகில் உள்ள தனது கணவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இதனால் மதன் தனியாக வசித்து வந்தார். அவரின் மனைவி தினமும் அவருக்கு சாப்பாடு கொடுத்து விடுவார். தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டைவிட்டு சென்றதற்கு பக்கத்து வீட்டுக்காரர்கள் தான் காரணம் என்று மதன் நினைத்தார். இதனால் அவர்கள் மீது கடும் கோபத்தில் இருந்தார் எனச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை திடீரென மதன் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதனால், வீட்டில் இருந்தவர்கள் தப்பி ஓடினர். அவர்களை மதன் விரட்டி விரட்டி கத்தியால் குத்தினார். இதில் ஜெயேந்திரா(72) மற்றும் அவரின் மனைவி மற்றும் கல்லூரியில் படிக்கும் ஜினல்(18) என்ற மாணவன் ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கத்தியால் குத்திய பிறகு மதன் தனது வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டார். போலீஸார் வந்து கதவை திறக்கும்படி கேட்ட பிறகும் கதவை திறக்க மறுத்தார். கதவை உடைத்துவிடுவோம் என்று சொன்ன பிறகும் திறக்கவில்லை. உடனே மதனின் 10 வயது மகனை வரவழைத்து மதனிடம் பேச வைத்தனர்.
அவரது மகன், தன் தந்தையிடம் `அம்மா மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டார்’ என்று சொன்னார். உடனே மதன் கதவை திறந்தார். அவரிடமிருந்து கத்தியை போலீஸார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் அபினவ் கூறுகையில், “குற்றவாளியிடம் நடத்திய விசாரணையில் தனது மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டை விட்டுச்சென்றதற்கு பக்கத்து வீட்டுக்காரரகள் தான் தூண்டிவிட்டதாக தெரிவித்துள்ளார். மதன் சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அதற்கு அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.