மின் கம்பம் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் மலையடிவாரப் பகுதியில் கிராமங்களும், விவசாய நிலங்களும் அதிகமாக இருக்கிறது. இப்பகுதியில் உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக காட்டு யானைகள் அடிக்கடி விவசாய நிலங்களுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் வந்து செல்கிறது. இதன் காரணமாக அவ்வப்போது யானை மனித மோதல்கள் ஏற்படும் சூழலும், விவசாய பயிர்கள் சேதம் அடைவதும் பின்னர் ஊருக்குள் வரும் யானைகளை வனத்துறையினர், பொதுமக்கள் காட்டுக்குள் விரட்டி அடிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பூச்சியூர் மலை கிராமப் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க காட்டு யானை ஊருக்குள் வந்த நிலையில் அந்த யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியின் போது சமதளப் பகுதியில் இருந்த மின்கம்பத்தின் மீது யானை மோதியுள்ளது.
இதனால் மின்கம்பம் உடைந்து யானை மேல் விழுந்ததில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மின்கம்பம் விழுந்து யானை உயிரிழந்த சம்பவம் மிகவும் துரதிஷ்டவசமானது என கோவை மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM