மதுரையில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
இப்போராட்டம் குறித்து நம்மிடம் பேசிய ஜாக்டோ – ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், “புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர், ஆசியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
தொகுப்புதியத்தில் பணியாற்றும் அரசு ஊழியர், ஆசிரியர், எம்.ஆர்.பி செவிலியர், ஊர்புர நூலகர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
சாலைப் பணியாளர்களின் 41 மாதம் பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர்ந்து போராடி வருகிறோம். தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் வைத்து வரும் எந்தவொரு கோரிக்கையும் இடம்பெறவில்லை. இதை கண்டித்துதான் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்” என்றனர்.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டமும், அதைத் தொடர்ந்து தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டமும் நடத்தினார்கள். இந்த நிலையில்தான் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
மதுரையில் தமுக்கம் தமிழன்னை சிலை அருகிலிருந்து மனித சங்கிலி போராட்டம் நடந்தது. அதுபோல் உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம் நகராட்சியிலும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ-ஜியோ அமைபினர் தெரிவித்திருக்கின்றனர்.