நாமக்கல் அருகே பெண் கிராம நிர்வாக அதிகாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரமத்திவேலுார் அடுத்துள்ள குன்னமலை சிக்கிநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பொன்னுசாமி (35) என்பவர் நாமக்கல் தொட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் திருச்செங்கோடு தாலுகா கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்த நவீனா என்ற பெண்ணுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நவீனா மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது நவீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த நல்லூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று நவீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in