டெல்லி: ராகுல் காந்திக்கு முன்பாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி முதல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வரை பலரும் நீதிமன்ற தண்டனைக்கு பின் தகுதி நீக்க நடவடிக்கையில் சிக்கி பதவியை இழந்துள்ளனர். பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்ததால் கேரளா வயநாடு எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு முன்பாக மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை அலகாபாத் உயர்நீதிமன்றம் குற்றவாளி என தீர்பளித்ததும் 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. இது அவரசர நிலை பிரகடனத்துக்கும் வழிவகுத்தது.
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டை விதித்தது. இதை தொடர்ந்து அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலக்க நேரிட்டது. மாட்டு தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டதால் ராஷ்டிரிய ஜனதா கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகாரில் எம்.பி.யாக தேர்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டது.
அதேபோல, மோசடி மற்றும் ஆயுதங்கள் பதுக்கிய வழக்குகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அனில் குமார் சஹ்னி மற்றும் அனந்த் சிங் ஆகியோர் மீது தகுதி நீக்க நடவடிக்கை பாய்ந்தது. அவதூறாக பேசிய வழக்கில் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அசாம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது. பாலியல் வழக்கில் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் கடந்த 2020-ம் ஆண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.