தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சு முத்துசாமி, “தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது . ஒவ்வொரு தொகுதியிலும் கூடுதலாக 50 ஆயிரம் பேரை திமுகவில் உறுப்பினராக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நாளை நடைபெறுகிறது. ராகுல் காந்தி மீதான நடவடிக்கையில் நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் கொடுத்துள்ள நிலையில், பாஜக அரசுக்கு அவசரம் தேவையில்லை. ஜனநாயகத்தில் தவறான செயல். இது தொடர்பாக முதல்வர் தெளிவாக கருத்து தெரிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் மக்களை தூண்டுவதற்காக வேண்டுமென்றே குறை சொல்கின்றனர். சரியான முறையில் அத்திட்டம் செயல்படுத்தப்படும். ஈரோட்டில் சோலார் மற்றும் கனிராவுத்தர் குளம் ஆகிய இரண்டு இடங்களிலும் தற்காலிக பேருந்து நிலையங்கள் விரைவில் செயல்பட தொடங்கும், நிரந்தர பேருந்து நிலையம் அமைக்கும் பணி சோலாரில் நடைபெற்று வருகிறது” என்றார்.