நேற்றைய தினம் வயநாடு எம்பி ராகுல்காந்தி, எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் எம்.பி.யாக இருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் பேசிய ராகுல்காந்தி, ‘ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்?’ என்று பேசியிருந்தார். இதையடுத்து குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி, சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் நேற்று முன்தினம் விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ராகுல்காந்தி, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். ராகுல்காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் அவர் எம்.பி.யாக இருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையடுத்து லோக்சபா செயலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “வயநாடு மக்களவை தொகுதி காலியாக உள்ளது. இதனால் வயநாடு மக்களவை தொகுதிக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம்” என தெரிவித்துள்ளது.
வயநாடு மக்களவை தொகுதிக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 151A, தேர்தலை கட்டாயமாக்குகிறது. ஏனெனில் இச்சட்டம் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப காலியிடம் ஏற்பட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுகிறது.
ஆனால் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டு, அதில் நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைக்க வாய்ப்புள்ளது. இதற்கிடையே தேர்தல் செயல்முறை அறிவிக்கப்பட்டாலும், இடைத்தேர்தலை நடத்தி முடிப்பதில் சிக்கல் வரலாம். லட்சத்தீவு உறுப்பினர் ஃபைசல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தோடு இதை ஒப்பிட்டு பார்த்தால் எளிமையாக் புரியும்.
இந்த சம்பவங்கள் யாவும் ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தால், இன்னொரு பக்கம் ராகுல் காந்தி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அபா முரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில், ‘கீழமை நீதிமன்றத்தால் கூட இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெறும் ஒரு மக்கள் பிரதிநிதி, மேல்முறையீடு செய்வதற்கு முன்பாகவே உடனடியாகவே தகுதி நீக்கம் செய்யப்படுவது என்பது அவரது மக்கள் பணியை செய்ய விடாமல் தடுக்கும் வகையில் இருக்கிறது. இதனால் அவரை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களும் சிரமங்களை சந்திப்பர். எனவே இந்த சட்டப்பிரிவை நீக்க வேண்டும்’ என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM