புதுடெல்லி: குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை.அடுத்து, சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் என்பவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில், ”மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8(3)ன்படி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி, தீர்ப்பு வந்ததும் தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடும் என்பது தவறானது.
எனவே, அவ்வாறு தானாகவே தகுதி நீக்கம் ஆகிவிடும் என்பதை சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவிக்க வேண்டும். தானாகவே பதவி பறிபோய்விடும் என்பது அரசியல் சாசனத்திற்குள் தன்னிச்சையாக, சட்டவிரோதமாக நுழைந்துள்ள வைரஸ் கிருமியைப் போன்றது என அறிவிக்க வேண்டும்” எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு வழக்கறிஞர் தீபக் பிரகாஷ் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆபா முரளிதரனின் மனுவில், ”அவதூறு வழக்கில் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்ட எம்எல்ஏ அல்லது எம்.பி.யின் பதவி பறிக்கப்பட மாட்டாது என இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499ன் படி உறுதிப்படுத்த வேண்டும். ஏனெனில், அவதூறு வழக்கில் தகுதி நீக்கம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமையை பாதிக்கிறது” என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.