தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இந்நிலையில் நடிகர் அஜித்தின் அப்பா பி சுப்பிரமணியம் நேற்று காலமானார். கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் அப்பா பி சுப்பிரமணியம் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார்.
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள்
இந்நிலையில் நேற்று அதிகாலை தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. அஜித்தின் தந்தை மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் சென்னை ஈசிஆரில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதையடுத்த நேற்று மாலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில், நடிகர் அஜித் தனது தந்தை இறந்த சோகத்திலும் ஒரு காரியத்தை செய்து நெகிழ வைத்துள்ளார். அஜித்தின் இந்த பண்பை பாராட்டி நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், “தந்தையின் மறைவின் போது, நண்பர் அஜீத் உள்ளூரில் இருந்தது நல்லது.சோகத்தை புதைத்துக் கொண்டு வந்தவர்க்கு நன்றி சொன்னார்.மயானம் செல்ல தயாரானபோது காரில் அமர்ந்தவர் என்னருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்)நிற்பதை கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமராவதி திரைப்படம் 1993ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தை செல்வா இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை சங்கவி நடித்திருந்தார். பிரபல தயாரிப்பாளரான சோழா பொன்னுரங்கம் இப்படத்தை தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் அஜித்துக்கு நல்ல வரவேற்பை கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.