பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை வீடு தேடி சென்று சந்தித்தார். அவரை வரவேற்கும் விதமாக எடியூரப்பா வழங்கிய பூங்கொத்தை ஏற்க மறுத்த மறுத்த அமித் ஷா, அதை எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவிடம் கொடுக்கச் சொல்லி பெற்றுக்கொண்டார்.
கர்நாடகாவில் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் அடிக்கடி அங்கு சென்று தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்துள்ள எடியூரப்பாவை சமாதானப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் அவரது பிறந்த நாளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி எடியூரப்பாவை வெகுவாக பாராட்டினார். மேலும் எடியூரப்பாவுக்கு பாஜகவின் பாராளுமன்ற குழுவிலும், தேர்தல் பிரச்சார குழுவிலும் இடமளிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்று முன் தினம் நள்ளிரவு 12 மணியளவில் பெங்களூரு வந்தார். நேற்று காலை 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு திடீரென சென்றார். அங்கு அவரை வரவேற்கும் விதமாக எடியூரப்பா பூங்கொத்தை வழங்க முற்பட்டார். அப்போது அமித் ஷா, அதனை எடியூரப்பாவின் இளைய மகனும் பாஜக மாநில துணை தலைவருமான விஜயேந்திராவிடம் கொடுக்க சொல்லி, அவர் கையில் இருந்து அமித் ஷா பூங்கொத்தை பெற்றார். விஜயேந்திராவின் முதுகில் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார். பின்னர் எடியூரப்பா அளித்த பூங்கொத்த பெற்ற அமித் ஷா, அவரை வணங்கினார்.
எடியூரப்பாவின் வீட்டில் இட்லி, வடை ஆகியவற்றை காலை உணவாக சாப்பிட்டார். இதையடுத்து எடியூரப்பா, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மேலிடப் பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோருடன் கர்நாடக தேர்தல் நிலவரம் குறித்து சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது தொகுதி நிலவரம், வேட்பாளர் தேர்வு, மேற்கொள்ள வேண்டிய பிரச்சாரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
லிங்காயத்து வாக்கு வங்கி குறி: எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதால் அவர் சார்ந்த லிங்காயத்து வகுப்பினர் பாஜக மீது அதிருப்தி அடைந்தனர். மேலிடத்தின் மீது கோபமடைந்த எடியூரப்பாவும் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் ஷிகாரிபுரா தொகுதியில் தனக்கு பதிலாக தனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் எனத் தெரிவித்தார். இதற்கு பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில் மோடியும், அமித் ஷாவும் எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் அதிருப்தியில் உள்ள லிங்காயத்து வாக்கு வங்கிக்கு குறி வைத்துள்ளதாக தெரிகிறது. மேலும் அமித் ஷா, விஜயேந்திரா கைகளால் பூங்கொத்து பெற்றதன் மூலம் அவரையும் சமரசம் செய்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.