தென்காசியில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, “மதுரையில் வர இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உள் கட்டமைப்பு வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை. வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அது முழு பயன்பாட்டிற்கு வரும். ஜப்பான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு 1900 கோடி பணத்தை வாங்கி அதை வட்டி இல்லாமல் 20 ஆண்டுகளில் திருப்பிச் செல்லும் வகையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுகிறது.
தமிழகத்தில் இந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் கிடைத்துள்ள வருமானம் 45 ஆயிரம் கோடி அடுத்தாண்டு 55 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வருவாயிலிருந்து 2000 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு கடனாக கொடுத்தால் எய்ம்ஸ் கட்டி முடித்து விடலாம். 2026 ஆம் ஆண்டுக்கு முன் மதுரை எய்ம்ஸ் வர வேண்டும் என்றால் தமிழக அரசு சாராயம் மூலம் பெற்ற வருவாயை கொடுக்க வேண்டும். வரும் ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் வெளியிடப்படும். அன்றைய தினம் மாபெரும் திருவிழாவாக அமையும். திமுக புள்ளிகள் 27 பேரின் சொத்து மட்டுமே, 2 லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். தமிழகத்தின் மொத்த வருமானத்தில் பத்து சதவீதம் அவர்களிடம் சென்றது எப்படி? அவர்களில் சிலர் அமைச்சர்கள்.
இன்றைக்கு மூன்று பேர்களை மையமாக வைத்து அரசியல் செய்து வருகிறோம். முதலாவது பெண்கள். இரண்டாவது இடத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள், மூன்றாவது இளைஞர்கள். இந்த மூன்றையும் மையமாக வைத்து தான் நமது அரசியல் செயல்படுகிறது. மோடி நமக்கு எல்லாம் கொடுத்திருக்கிறார். அவருக்கு திருப்பி கொடுக்க வேண்டிய கடமை தமிழக மக்களுக்கு இருக்கிறது. வாரணாசியில் மோடி பாஜக வேட்பாளராக வெற்றி பெறுவது போல் தென்காசி தொகுதியிலும் பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவார்” என்றார்.