“பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு ;எனக்கு எந்த கவலையும் இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி குஜராத் நீதிமன்றம் உத்தரவுக்கு பிறகு ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ”நான் மக்களவையில் பேச அனுமதி கேட்டேன்; ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். ஜனநாயகத்திற்கு ஆதரவான நான், ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தொடர்ந்து குற்றம் சாட்டியதால் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது என் மீது மட்டுமல்ல; ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீதும் எடுக்கப்பட்டு இருக்கக்கூடிய நடவடிக்கை.
பாரதி ஜனதா கட்சியின் ஒவ்வொரு அமைச்சர்களும் என் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர். ஆனால் குற்றச்சாட்டுகள் மீதான விளக்கத்தை அளிக்க தனக்கு நேரம் வழங்க வேண்டும் என சபாநாயகரிடம் கேட்டும் அவர் வழங்கவில்லை. லண்டனில் நான் பேசியது இந்திய ஜனநாயகத்தை பாதித்துவிட்டது என சொல்கின்றனர் மத்திய அமைச்சர்கள்; இப்போது என் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஜனநாயக முறை நடவடிக்கையா?
இந்திய ஜனநாயகத்திற்கு ஆதரவான எனது குரல்கள் இனிமேலும் தொடர்ந்து ஒலிக்கும். இனிமேல் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் ஒரே வழி மக்களிடம் நிலைமையை கொண்டு செல்வது மட்டும்தான். நான் கேட்ட கேள்வி ஒன்று தான். அதானியின் Shell நிறுவனங்களில் 20000 கோடி அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அது யாருடையது?
நாடாளுமன்ற தரவுகள், மீடியா தரவுகள் அடிப்படையில் தான் இந்த கேள்வியை நான் எழுப்பினேன். ஆனால் என்னுடைய பேச்சுப் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. அதானி குறித்து நான் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் அவர்கள் பயப்படுகிறார்கள். நான் உண்மையை மட்டுமே இப்போதுவரை பேசி வருகிறேன். இனிமேலும் உண்மையை மட்டுமே பேசுவேன். நான் கைது செய்யப்பட்டாலும் தொடர்ந்து உண்மையை மட்டுமே பேசுவேன். காரணம், இந்த நாடு எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளது. பதவி நீக்கம் எனக்கு கிடைத்த பரிசு; எனக்கு எந்த கவலையும் இல்லை. நாட்டுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் உண்மையை பேசுவதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன்” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM