கர்ப்பகால போட்டோ ஷூட் (Maternity Photoshoot) இப்போது மிகவும் பிரபலk;. கேரள மாநிலத்தில் சிஞ்சு என்ற 27 வயது பெண், அவரின் தாய், மாமியார், 82 வயது பாட்டி ஆகிய நால்வரும் ஒரே சமயத்தில் கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஒரே வீட்டில் ஒரே சமயத்தில் நால்வரும் கர்ப்பமா எனப் பலரும் ஆச்சர்யத்துடன் கேட்டிருந்தனர்.
அதன்பிறகுதான் ஒரு புகைப்படக் கலைஞர் தன் மனைவியின் கர்ப்பகால போட்டோ ஷூட்டை வித்தியசமான முறையில் எடுக்க விரும்பி குறும்புத்தனமாக தன் தாய், மாமியார், பாட்டி ஆகியோருக்கு சினிமாவில் வருவதுபோன்று தலையணை வைத்து கர்ப்பமாக தோற்றத்தை ஏற்படுத்தி போட்டோ எடுத்தது தெரியவந்தது. அந்த போட்டோவை எடுத்த கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் முண்டகயம் பகுதியைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஜிபின் ஜோயிடம் பேசினேன், “நான் முண்டக்கயத்தில் ஆத்ரேயா வெட்டிங் ஸ்டோரிஸ் என்ற பெயரில் ஸ்டூடியோ வைத்துள்ளேன். திருமண போட்டோக்கள் ஷூட் செய்வதுதான் எனக்கு மிகவும் பிடித்தமானது.
எனக்கும் சிஞ்சுவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இப்போது என் மனைவி 8 மாதம் கர்ப்பமாக உள்ளார். என் மனைவி சிஞ்சு-வின் முதல் கர்ப்பகால போட்டோ ஷூட் எடுக்க ஒரு தீம் யோசித்தேன். ரோமாஞ்சம் என்ற மலையாள சினிமாவில் `ஒற்றமுறி வாக்குமாய்…’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அந்தப் பாடலில் பழைய தலைமுறையை உள்வாங்கிய புதிய தலைமுறை குறித்த வரிகள் வரும். அதில் இருந்து யோசித்துதான் நான் இந்த தீம் உருவாக்கினேன். அதன்படி என் அம்மா, மாமியார், பாட்டி ஆகியோரையும் கர்ப்பிணியாக வேடமிட்டு என் மனைவியுடன் சேர்த்து கர்ப்பகால போட்டோ ஷூட் எடுக்கும் எண்ணத்துக்கு வடிவம் கொடுக்க முடிவு செய்தேன்.
இதுபற்றி என் மனைவியிடம் சொன்னதும் அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். என் அப்பா- அம்மா, எனது தாத்தா- பாட்டி, என் மனைவியின் அப்பா- அம்மா ஆகியோரிடம் இதுபற்றி பேசினோம். அவர்களுக்கும் இந்த தீம் பிடித்திருந்தது. என் குழந்தையுடன் சேர்த்து நான்காம் தலைமுறை என்ற ரீதியில் இந்த போட்டோ ஷூட்டை வடிவமைத்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு போட்டோஷூட் நடத்தினேன். அந்த போட்டோக்களை சாதாரணமாகத்தான் இன்ஸ்டாகிராமிலும், ஃபேஸ்புக்கிலும் பதிவேற்றம் செய்தேன்.
என்னைப் பொறுத்தவரை இது சாதாரண கன்டன்ட்தான். இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகும் என நான் நினைத்துப்பார்க்கவில்லை. அனைவரும் நான் எதிர்பாராத நல்ல கமென்ட்டுகளை பதிவிட்டுள்ளனர். `இதுவரை நாங்கள் பார்க்காத வெரைட்டி தீம்’ என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் நான் நன்றி கூறிக்கொள்கிறேன். எனது எண்ணத்துக்கு ஒத்துழைத்த எனது தாத்தா ஜார்ஜ் சாக்கோ (87), பாட்டி சின்னம்மா(82), அப்பா ஜார்ஜ் ஜோய்(60), அம்மா திரேசம்மா (59), மாமா சாபு(55), அத்தை சுஜாதா(47) ஆகியோருக்கும் நந்தி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.