சென்னை அருகே ஆன்லைனில் கார் வாடகைக்கு எடுத்து அதனை விற்றதாக இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்து அந்த காரை மீட்டுள்ளனர்.
சென்னை புழல் லேக் சைடு அப்பார்ட்மெண்ட்ஸை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஊழியரான பாலாஜி சங்கர் (27). இவர் ஆன்லைன் மூலம் தமது காரை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதியன்று பாலாஜி சங்கருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட இருவர், வாடகைக்கு கார் தேவை எனக்கூறி தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து காரை ஓட்டி சென்றுள்ளனர். ஆனால், 10 நாட்களாகியும் கார் திரும்ப வராததல் சந்தேகமடைந்த பாலாஜி சங்கர், ஜிபிஎஸ் கருவியை சோதித்த போது அதன் செயலும் துண்டிக்கபட்டதால், இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரை வாடகைக்கு எடுத்து அதனை விற்றுவிட்டது தெரிய வந்தது. இதனையடுத்து காரை வாடகைக்கு எடுத்த அகிலன் (30), பாபு (51) ஆகிய இருவரை கைது செய்து அவர்களிடம் இருந்து காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM