மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த மார்ச் 22ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடமும், மூத்த அமைச்சர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கடுமை காட்டியுள்ளதாக சொல்கிறார்கள்.
கட்சி, ஆட்சி மீது எந்த விமர்சனமும் வந்து விடக்கூடாது என ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைத்து வருகிறார் ஸ்டாலின். ஆனால் மூத்த அமைச்சர்களே பொது வெளியில் வார்த்தைகளை விடுவது, திமுகவினரே காவல் நிலையத்தில் புகுந்து சொந்தக் கட்சிக்காரர்களையே அடிப்பது என ஒவ்வொரு சம்பவமும் ஸ்டாலினின் கோபத்தை அதிகரித்தபடியே உள்ளது. இது தொடர்பாக வழக்கம் போல் யார் பெயரையும் நேரடியாக குறிப்பிடாமல் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார் ஸ்டாலின்.
இது ஒருபுறமிருக்க அத்தனை மாவட்டச் செயலாளர்களுக்கும் புது அசைண்ட்மெண்ட் ஒன்றை ஸ்டாலின் கொடுத்துள்ளார்.
நூற்றாண்டு விழா ஜூன் 3ஆம் தேதி தொடங்க உள்ளது. நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஊரிலும் பொதுக்கூட்டங்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஜூன் 3ஆம் தேதிக்குள் திமுகவில் குறைந்தது ஒரு கோடி பேரையாவது இணைக்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாராம்.
தமிழ்நாட்டில் அதிக தொண்டர்களை கொண்ட கட்சி அதிமுக தான் என்று அவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஒன்றரை கோடி தொண்டர்கள் என்று திரும்ப திரும்ப சொல்லி அதை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளனர். எனவே இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட கட்சி திமுக என்று சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம் ஸ்டாலின்.
அதற்காக இரு மாதங்களுக்குள் ஒரு கோடி பேரை புதிதாக கட்சியில் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அவசர அவசரமாக இவ்வளவு பேரை எப்படி இணைக்க முடியும் என கட்சியினரே திணறி வருகிறார்களாம்.
திமுக ஆட்சி மீது நல்ல அபிப்ராயம் கொண்டுள்ள மக்களை, திமுக அபிமானிகளை கட்சி உறுப்பினர்களாக மாற்றி விட்டால் வரும் காலங்களில் தேர்தலில் வெல்வது எளிதாகிவிடும். திமுகவின் வாக்கு சதவீதம் எகிறும் என்பது கட்சி தலைமையின் எண்ணமாக இருக்கிறது.
ஆனால் கட்சி கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பது போல் இது சாதாரண காரியமல்ல. வீடு வீடாக நோட்டீஸ் கொடுப்பது போல் உறுப்பினர் அட்டை வழங்க முடியாது. கட்சி குறித்து, திமுக அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து கொஞ்சம் கொஞ்சமாக பேசி மக்கள் மனங்களை வென்று கட்சியில் இணைக்க வேண்டும். ஒரு கோடி டார்கெட் என்பது நல்ல முடிவு தான். ஆனால் அதற்கு போதிய அவகாசம் கொடுக்க வேண்டும்.
இல்லையேல் ஆளுக்கு நாலு அட்டை கொடுத்து கணக்கு காட்ட வாய்ப்பு இருக்கிறது என்று திமுகவுக்குள்ளிருந்தே குரல்கள் எழுகின்றன.