விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘லியோ’ படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்ய நிகழ்வை, பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.
‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் ‘லியோ’. சென்னையை தொடர்ந்து, கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் 500-க்கும் மேற்பட்டோரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஷ்மீரில் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், பிரபல மலையாள நடிகர் பாபு ஆண்டனி, இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், தமிழில் சத்யராஜின் ‘பூவிழி வாசலிலே’, ‘பேர் சொல்லும் பிள்ளை’, ‘சூரியன்’, ‘அஞ்சலி’ உள்ளிட்டப் படங்களில் வில்லனாகவும், தற்போது குணசித்திர நடிகராகவும் நடித்து வரும் பாபு ஆண்டனி தனது சமூகவலைத்தளம் வாயிலாக ‘லியோ’ படப்பிடிப்புத் தளத்தில் விஜய்யுடன் பேசியபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வைப் பகிர்ந்துள்ளார். அதில், “இளைய தளபதி விஜய் சார், மிகவும் பணிவாகவும், அன்பாகவும் நடந்து கொண்டார்.
நான் நடித்த ‘பூவிழி வாசலிலே’, ‘சூரியன்’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ போன்ற திரைப்படங்களை அவர் மிகவும் ரசித்ததாகவும், அவர் எனது ரசிகர் என்றும் கூறினார். அது எனக்கு மிகவும் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து இதுபோன்ற வார்த்தைகளை கேட்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் அனைவருமே அன்புடன் நடந்துக்கொண்டார்கள். இவ்வாறு கிடைப்பது ஒரு வரம். இத்தனைக்கும் விஜய் மற்றும் அனைவரையும் இப்போதுதான் முதல்முறையாக சந்தித்தேன்” என வியப்புடன் அவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளார்.