மதுரை: நீதிமன்ற தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து மாநில மொழிகளில் மொழி பெயர்ப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முதலிடத்தில் உள்ளதாக பொறுப்பு தலைமை நீதிபதி கூறியுள்ளார். மதுரை கூடுதல் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசுகையில், ‘‘நமது சட்டத்தை பற்றி 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் நீதிமன்றங்களில் ஆன்லைன் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்புகளை ஆங்கிலத்தில் இருந்து மாநில மொழிகளில் மொழி பெயர்க்கும் நடவடிக்கையில் சென்னை உயர்நீதிமன்றம் தான் முதலிடத்தில் உள்ளது’’ என்றார். தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசும்போது, ‘‘நீட் தேர்வு தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி கூறியுள்ள கருத்துக்கள், எங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்கள் கொடுத்த நம்பிக்கையான வார்த்தை ஆகும். ரூ.166 கோடியில் கட்டப்படும் இந்த நீதிமன்றம் ஒரு மைல் கல்லாக அமையும்’’ என்றார்.