கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடுபெறும் அரசின் நடவடிக்கையால் சாகுபடி பரப்பளவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பேரிகை, சூளகிரி, கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாக 475 ஹெக்டேர் பரப்பளவில் பசுமைக் குடில் அமைத்து விவசாயிகள் ரோஜா மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாடுகளில் வரவேற்பு: இங்கு சாகுபடி செய்யப்படும் தரமான ரோஜா மலர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளதால், பெங்களூரு வர்த்தக மையம் மூலம் சிங்கப்பூர், மலேசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதேபோல, திறந்த வெளியில் பன்னீர் ரோஜா (நாட்டு ரகம்), பட்டன் ரோஜா சாகுபடியிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, ஓசூர், தளி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி, வேப்பனப்பள்ளி, காவேரிப்பட்டணம், ஆவல்நத்தம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக விவசாயிகள் பன்னீர் ரோஜா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வகை ரோஜாக்கள் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்குச் செல்கின்றன.
பன்னீர் ரோஜா சாகுபடியில் பராமரிப்பு செலவு கூடுதலாகவும், விழாக் காலங்களில் மட்டும் வருவாய் கிடைப்பதால் குறைந்த அளவே விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். இந்நிலையில் புவிசார் குறியீடு பெறும் அரசின் நடவடிக்கையால் சாகுபடி பரப்பு அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நறுமண நாட்டு ரோஜா: இதுதொடர்பாக தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிக நறுமணம் கொண்ட நாட்டு ரோஜா எனப்படும் பன்னீர் ரோஜாக்களை விவசாயிகள் சாகுபடி செய்தனர். நல்ல தரமான பூக்களை உற்பத்தி செய்ததால், கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாவுக்குச் சந்தையில் தனிச் சிறப்பு இருந்தது. பராமரிப்பு செலவு அதிகமாகவும், விலை சரிவு உள்ளிட்டவையால் பல விவசாயிகள் உற்பத்தியைக் கைவிட்டனர்.
தற்போது, மாவட்டம் முழுவதும் 300 ஏக்கர் பரப்பளவில் பன்னீர் ரோஜா மற்றும் பட்டன் ரோஜாக்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாவுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண் பட்ஜெட் அறிவிப்பால் மீண்டும் பன்னீர் ரோஜா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விலை இல்லை: ஓசூர் மலர் விவசாயி பாலசிவபிரசாத் கூறும்போது, “பன்னீர் ரோஜா விழாக் காலங்களில்தான் கிலோ ரூ.200 வரை விற்பனையாகும். மற்ற நாட்களில் விலை இருப்பதில்லை. எனவே பசுமைக் குடில் ரோஜாவுக்கு புவிசார் குறியீடு பெற்றால், பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.
வாசனைத் திரவிய தொழிற்சாலை தொடங்க கோரிக்கை “கிருஷ்ணகிரி அல்லது காவேரிப்பட்டணத்தை மையமாக வைத்து வாசனைத் திரவிய தொழிற்சாலையை அரசு தொடங்க வேண்டும். இதன்மூலம் பன்னீர் ரோஜாவுக்கு விலை இல்லாத காலங்களில் செண்ட் தயாரிக்க பயன்படுத்தலாம்.
இதேபோல, மாவட்டத்தில் பன்னீர் ரோஜா தவிர மல்லிகை உள்ளிட்ட நறுமண மலர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவதால், வாசனை திரவிய தொழிற்சாலை விவசாயிகளுக்கு கைகொடுக்கும்” என விவசாயிகள் தெரிவித்தனர்.
வாசனைத் திரவிய தொழிற்சாலை தொடங்க கோரிக்கை: “கிருஷ்ணகிரி அல்லது காவேரிப்பட்டணத்தை மையமாக வைத்து வாசனைத் திரவிய தொழிற்சாலையை அரசு தொடங்க வேண்டும். இதன்மூலம் பன்னீர் ரோஜாவுக்கு விலை இல்லாத காலங்களில் செண்ட் தயாரிக்க பயன்படுத்தலாம். இதேபோல, மாவட்டத்தில் பன்னீர் ரோஜா தவிர மல்லிகை உள்ளிட்ட நறுமண மலர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவதால், வாசனை திரவிய தொழிற்சாலை விவசாயிகளுக்கு கைகொடுக்கும்” என விவசாயிகள் தெரிவித்தனர்.