உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மதுரை: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டுமென மதுரையில் நடந்த கூடுதல் நீதிமன்ற அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், கூடுதல் நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுவதற்காக தமிழ்நாடு அரசு ரூ.166 கோடி ஒதுக்கியது. இதையடுத்து கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றங்களின் துவக்க விழா நேற்று நடந்தது. முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா வரவேற்றார். மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த இவ்விழாவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றங்களுக்கான அடிக்கல் நாட்டினார். மயிலாடுதுறை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினும், மயிலாடுதுறை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தை ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் துவக்கி வைத்தனர்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டுக்கு முதன்முதலாக வந்துள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்கிறேன். ‘உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற போது, பொதுமக்களுக்குச் சேவையாற்றுவதே எனது முன்னுரிமை. நாட்டில் உள்ள அனைவருக்காகவும் நான் பணியாற்றுவேன்’ எனக்கூறிய நீங்கள், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று,  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளீர்கள்.

தமிழ்நாட்டின் மீதும், தமிழ்நாட்டு மக்கள் மீதும் தங்களுக்குத் தனிப்பாசம் உண்டு. கொரோனா 2ம் அலையை கட்டுப்படுத்துவதில் நாட்டிலேயே சிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்கியது எனவும், தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பைச் சுட்டிக்காட்டி அரசின் செயல்பாடுகளை பாராட்டியிருந்தீர்கள். இதற்காக நன்றி தெரிவிக்கிறேன். தமிழ் உள்ளிட்ட பல மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் சமீபத்தில் வெளியாகி இருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை மதுரையில் அமைந்ததற்கு அடித்தளம் இட்டவர் கலைஞர் தான். 1973 முதல் முயற்சி செய்தார். 2000ம் ஆண்டு முதலமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டது.

மதுரையில் ஐகோர்ட் கிளையை துவக்கியதன் மூலம், தென் மாவட்ட மக்களின் கனவை கலைஞர் நனவாக்கினார். அந்த மாபெரும் கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது. இதனை நான் குறிப்பிடுவதற்குக் காரணம், நீதித்துறையின் உள்கட்டமைப்புக்காக தொலைநோக்குச் சிந்தனையுடன் செயல்படும் அரசு, திமுக அரசு என்பதற்காகத் தான். நீதி நிர்வாகம் சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்பட வசதியாகவும், பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குவதை உறுதி செய்யவும் நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டிட வசதி, மனித ஆற்றல், பிற உள்கட்டமைப்பு வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம். இதை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்து செயல்படுகிறது.

இந்த அரசு பதவியேற்றது முதல் தற்போது வரை புதிய நீதிமன்றங்கள் அமைக்க தேவையான நீதிபதிகள், அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி, அதற்கு தேவையான ரூ.106.77 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. 6 மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள் உள்ளிட்ட 44 புதிய நீதிமன்றங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம் மற்றும் செங்கல்பட்டில் 3 வணிகச் சட்டங்களுக்கான தனி நீதிமன்றங்களும், கோவை, காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு நீதிமன்றங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவரும் 160 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 60 நீதிமன்றங்களை ஒரே கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய வசதியாக ரூ.315 கோடியில் பல்லடுக்கு மாடிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமையவுள்ளது.

டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் கட்டிடத்தை அதன் பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க ரூ.23 கோடி வழங்கப்பட்டுள்ளது. புதியதாக நீதிமன்றங்கள் கட்டுதல், குடியிருப்புகள், பழைய நீதிமன்ற கட்டிடங்களைப் பராமரித்தலுக்காக ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சேமநலநிதிக்கு மானியமாக ரூ.8 கோடியுடன், சேமநல நிதியும் ரூ. 7 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டது. புதிதாக பதிவு செய்த ஆயிரம் இளம் வழக்குரைஞர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரம் மாதந்தோறும் வழங்கவுள்ளோம். நீதித்துறையின் கட்டமைப்பை மேம்படுத்தத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களுக்கு 3 முக்கிய கோரிக்கைகள் வைக்கிறேன். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி பின்பற்றப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலத்துடன் தமிழையும் அனுமதிக்க வேண்டும். இதற்கு ஒன்றிய சட்ட அமைச்சர் துணையாக இருக்க வேண்டும். அதே நேரம் சென்னை, மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் உச்சநீதிமன்றத்தின் கிளையை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஏற்கனவே ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

எங்களது இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும், ஒன்றிய சட்ட அமைச்சரும் பரிசீலிக்க வேண்டும். நீதித்துறை சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்கி ஒவ்வொரு சாமானியனின் இறுதி நம்பிக்கையையும் காப்பாற்றட்டும். நீதித்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புக்கள் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.  
 நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியம், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, அமைச்சர்கள் ரகுபதி, பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல்தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஐகோர்ட் நீதிபதி ஆர்.மகாதேவன் நன்றி கூறினார்.

* டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் கட்டிடத்தை அதன் பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க ரூ.23 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* புதிதாக நீதிமன்றங்கள் கட்டுதல், குடியிருப்புகள், பழைய நீதிமன்ற கட்டிடங்களைப் பராமரித்தலுக்காக ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* புதிதாக பதிவு செய்த 1000 இளம் வழக்குரைஞர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3 ஆயிரம் மாதந்தோறும் வழங்கவுள்ளோம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.