புதுடெல்லி: பீகாரில் ரயில்வே பணி நியமன ஊழல் தொடர்பாக துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரியும் எம்பியுமான மிசா பாரதி ஆகியோர் நேற்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வேயில் வேலை வாங்கி தருவதற்காக ஏராளமானோரிடம் நிலத்தை அன்பளிப்பாகவும்,குறைந்த விலைக்கு பெற்றதாகவும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இந்த வழக்கில் லாலுவின் இளைய மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் மீதும் சிபிஐ கடந்த ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி துணை முதல்வர் தேஜஸ்விக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது. இதனை தொடர்ந்து நேற்று காலை அவர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள். முன்னதாக பீகார் சட்டமன்ற கூட்டம் நடந்து வருவதால் தேஜஸ்விக்கு அவகாசம் தேவை என்று அவரது வழக்கறிஞர் கடந்தவாரம் நீதிமன்றத்தில் கோரியிருந்தார். அப்போது தேஜஸ்வி யாதவை இந்த மாதம் கைது செய்ய மாட்டோம் என்று சிபிஐ உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதே வழக்கில் லாலுவின் மகளும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்பியுமான மிசா பாரதி(46)யும் டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேற்று ஆஜரானார். அவரிடம் 7 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள்.