புதுடெல்லி: மக்களவைச் செயலகம் தகுதி இழப்பு செய்தது குறித்து நேற்று பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘‘மக்களவையில் எனது அடுத்த பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பயந்துவிட்டார். அதனால் நான் தகுதி இழப்பு செய்யப்பட்டேன்’’ என கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: அதானி குழுமத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியதால்தான், மக்களவையில் இருந்து என்னை தகுதி இழப்பு செய்துள்ளனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது. அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொய்யான கருத்துகளை தெரிவித்து விஷயத்தை திசை திருப்ப ராகுல் முயற்சிக்கிறார்.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை ராகுல் புண்படுத்தியுள்ளார். இதற்கு அவருக்கு உரிமை உள்ளது என்றால், பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை அணுகவும் உரிமை உள்ளது. தான்தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க தயாரா என நீதிமன்றம் ராகுலிடம் கேட்டது? அதற்கு ராகுல் மறுத்துவிட்டார். அதன்பின்புதான் இந்த தீர்ப்பு வந்தது. திருடர்கள் என கூறியதால், மோடி சமூகத்தினர் மிகுந்த வேதனையடைந்தனர். இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை ராகுல் காந்தி வேண்டும் என்றே புண்படுத்தியுள்ளார். ராகுல் தெரிவித்த கருத்துக்கு எதிராக பாஜக தீவிர போராட்டத்தை தொடங்கும்.
காங்கிரஸ் கட்சியில் மிகப் பெரிய வழக்கறிஞர் பட்டாளமே உள்ளது. அவர்கள் ஏன் இந்த உத்தரவுக்கு தடை பெற சூரத் நீதிமன்றத்துக்கோ, உயர் நீதிமன்றத் துக்கோ, உச்ச நீதிமன்றத்துக்கோ செல்லவில்லை. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கேரா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, ஒரு மணி நேரத்துக்குள் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது காங்கிரஸ். ராகுல் காந்தி விஷயத்தில் அவர்களது வழக்கறிஞர்கள் மவுனம் காப்பது ஏன்? இந்த விஷயத்தில் அவர்கள் வேண்டும் என்றே தடை உத்தரவு பெறவில்லை. ஏனென்றால் கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் வருகிறது. ராகுல்காந்தி தனது எம்.பி பதவியை தியாகம் செய்தது போல் பிரச்சாரம் செய்து கர்நாடக தேர்தலில் ஆதாயம் அடைவதற்காக அவர்கள் கவனமாக இந்த வியூகத்தை வகுத்துள்ளனர்.
ராகுல் காந்தி மட்டும் அல்ல, நாடு முழுவதும் பாஜகவைச் சேர்ந்த 6 பேர் உட்பட மக்கள் பிரதிநிதிகள் 32 பேர் தகுதி இழப்பு செய்யப்பட்டுள்ளனர். அங்கெல்லாம் இடைத் தேர்தல் நடந்துள்ளது. ராகுலுக்காக தனிச்சட்டம் கொண்டு வர முடியுமா? மோடி பெயர் குறித்து ராகுல் தெரிவித்தது விமர்சனம் அல்ல, அந்த சமுதாயத்தினரை தவறாக பழித்து கூறியுள்ளார். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.