சென்னை ஆண்டார் குப்பம் அரியலூர் சாலை அருகே உள்ள மழைநீர் கால்வாயில், எரிந்த நிலையில் மூதாட்டி சடலம் ஒன்று காணப்பட்டுள்ளது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், எரிந்த நிலையில் கிடந்த மூதாட்டி, மணலி சிபிசிஎல் நகரைச் சேர்ந்த மூதாட்டி வடிவம்மாள் (72) என்பதும், இவருக்கு 3 மகன்கள் ஒரு மகள் இருப்பது தெரியவந்தது.
மேலும் மூதாட்டி நடக்க முடியாத சூழ்நிலையில் இருந்ததாகவும், அவரை யாரோ 4 கிலோ மீட்டர் தூரம் தூக்கி வந்து, மழை நீர் கால்வாயில் வைத்து எரித்து கொலை செய்திருப்பதாகவும் கூறும் போலீசார், சொத்து விவகாரம் காரணமாக கொலை நடந்ததா என விசாரித்து வருகின்றனர்.