சென்னை: பட்டியலின மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே,தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் தலையிட்டு, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வி.மாதேபள்ளியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயராமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: வி.மாதேபள்ளியில் உள்ள சக்கியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அறநிலையத் துறை, சீனிவாசனுக்கு நோட்டீஸ் பிறப்பித்தது. அதையடுத்து, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த தனக்குச் சொந்தமான நிலத்தை, அறநிலையத் துறை சட்டவிரோதமாக எடுக்க முயற்சிப்பதாக சீனிவாசன் தேசிய எஸ்.சி.,எஸ்.டி. ஆணையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரை விசாரித்த தேசிய பட்டியலின ஆணையம், அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உண்மை நிலவரம் தெரியாமல், தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சிவில் நீதிமன்றத்தின் அதிகாரத்தை எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் கையில் எடுத்துக்கொண்டு, இவ்வாறு உத்தரவிட முடியாது. எனவே ஆணையம் இதுதொடர்பாக பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இவ்வழக்கு பொறுப்பு தலைமைநீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதிடி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை சார்பில் அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, ‘‘கோயில் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சீனிவாசன் உள்ளிட்ட 11 பேருக்கும் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் உத்தரவு காரணமாக அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியவில்லை. எனவே, ஆணைய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என்றார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் நவீன்குமார் மூர்த்தி ஆஜராகி, ‘‘ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டாலோ அல்லது அவர்களுக்கு சமுதாய ரீதியாக தீங்கு இழைக்கப்பட்டாலோ மட்டுமே ஆணையம் தலையிட முடி யும்’’ என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பட்டியலின மக்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே அதில் தலையிட்டு, தகுந்த உத்தரவு பிறப்பிக்க முடியும். மாறாக, கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவருக்கு எதிராக அறநிலையத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தால் நிறுத்திவைக்க முடியாது.
இந்த வழக்கை பொருத்தவரை, தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் ஆவணங்களை சரிபார்க்காமல், தன்னிச்சையாக அவசரகதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவ்வாறு உத்தரவிட ஆணையத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே, ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கோயில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அறநிலையத் துறை உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கெனவே ஆவணங்களை மறைத்து, வழக்கு தொடர்ந்த சீனிவாசனுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கிறோம்’’ என்று தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.