அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இந்தச் சூறாவளியால் ஏராளமான வீடுகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்தன. மிஸ்ஸிசிப்பி, அலபாமா மாகாணங்கள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது. மேலும் மின் கம்பிகள் மற்றும் மரங்கள் முற்றிலும் சரிந்து விழுந்திருக்கின்றன. கடும் இடி மழையுடன் சூறாவளி காற்று வீசியதால், பல பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளி காற்றில் கார்கள் மற்றும் வாகனங்கள் மோசமாகச் சேதமடைந்தன.
வீடு, கட்டட இடிபாடுகளில் பொதுமக்கள் பலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மிஸ்ஸிசிப்பி மாகாணத்தின் தலைநகரான ஜாக்சனுக்கு வடகிழக்கே சுமார் 60 மைல்கள் தொலைவிலுள்ள, சில்வர் சிட்டி, ரோலிங் ஃபோர்க் ஆகிய கிராமப்புற பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.
அமெரிக்காவின் தென்பகுதியிலுஉள்ள எட்டு மாகாணங்களிலும் வீடுகள் மற்றும் கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்திருக்கின்றன.
அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வானிலை மிகவும் மோசமானதாக இருக்கும். இந்தக் காலத்தில் சூறாவளி, புயல் காற்று, இடியுடன் கூடிய கனமழை ஆகியவை நிகழக்கூடும்.
இந்தச் சூறாவளிக் காற்றின் கோரத் தாண்டவத்தில் சிக்கி, 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏராளமானோர் காயமடைந்திருப்பதாகவும், சிலரைக் காணவில்லை எனவும், மிஸ்ஸிசிப்பியின் எமர்ஜென்சி மேனேஜ்மென்ட் ஏஜென்சி தெரிவித்திருக்கிறது. மேலும் இது குறித்து, “அதிக அளவிலான மாநில மீட்பு குழுக்கள், தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மற்றும் காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது” என்றும் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது.
மிஸ்ஸிசிப்பியின் கவர்னர் டேட் ரீவ்ஸ் ட்விட்டரில், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் மூலம் மருத்துவ உதவிகளை அளித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார். சமூக வலைதளமான ட்விட்டரில், அமெரிக்க மக்கள் பலரும் #prayforMississippi எனப் பதிவிட்டு வருகின்றனர்.