அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தின் திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் மணிமாறன். இவர் ஊராட்சி ஒன்றியத்தில் சாலைப் பணி, களம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார்.
அந்த பணிக்கான பில் தொகையை வாங்குவதற்காக ஊரக வளர்ச்சித்துறை உதவி கோட்ட பொறியாளர் வஹிதா பானுவை சந்தித்துள்ளார். அப்போது அவர் பில் தொகையைத தர வேண்டும் என்றால் ஒப்பந்த தொகையில் இரண்டு சதவீதம் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு மறுப்புத் தெரிவித்த மணிமாறன் சம்பவம் குறித்து அரியலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை மணிமாறனிடம் கொடுத்துள்ளனர்.
அதன் படி, அதனை எடுத்துக் கொண்டு சென்ற மணிமாறன், உதவி கோட்ட பொறியாளர் வஹிதாபானுவை ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு பகுதிக்கு வரச்சொல்லி, பணத்தைக் கொடுத்துள்ளார். cஅந்த நேரத்தில் அந்த பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் வஹிதா பானுவை கையும், களவுமாக கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வஹிதா பானுவை கங்கைகொண்ட சோழபுரம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.