பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டு பகுதியிலிருந்து கிருஷ்ணராஜபுரா வரை 13.7 கி.மீ தூரத்துக்கு ரூ.4,250 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுத்து அவர் புதிய வழித்தடத்தில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த பல தரப்பினருடன் அவர் கலந்துரையாடினார்.
முன்னதாக கர்நாடக மாநிலம் சிக்கபள்ளபுரா மாவட்டத்தின் முத்தேனஹள்ளி அருகே உள்ள சத்யசாய் கிராமத்தில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை (எஸ்எம்எஸ்ஐஎம்எஸ்ஆர்) பிரத மர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதை ஸ்ரீ சத்ய சாய் பல்கலைக்கழகம் நிறுவியுள்ளது. இந்தக் கல்லூரி இந்தக் கல்வி ஆண்டு முதல் செயல்படுகிறது. மருத்துவக் கல்வியை வியாபாரம் அற்றதாக மாற்ற வேண்டும் என்ற தொலை நோக்குடன், இந்த மருத்துவக் கல்லூரி கிராமப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி, மருத்துவக் கல்வி மற்றும் தரமான மருத்துவ சிகிச்சையை முற்றிலும் இலவசமாக வழங்கவுள்ளது. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் மற்றும் மதுசூதன் சாய் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதில் பிரதமர் மோடி பேசியதாவது: நாடு 75-வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் வேளையில், நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற மத்திய அரசு உறுதி எடுத்துள்ளது. குறுகிய காலத்தில் இந்த மிகப் பெரிய உறுதியை நிறைவேற்ற மக்களும் ஆர்வமாக உள்ளனர். அனைவருக்குமான வளர்ச்சியை ஒவ்வொரு குடிமகனும் உணரப் போகின்றனர். வளர்ந்த இந்தி யாவை உருவாக்கும் பயணத்தில் சமூக மற்றும் மத அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. 2014-ம் ஆண்டுக்கு முன் நாட்டில் 380-க்கும் குறைவான மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 650-க்கும் மேல் அதிகரித்துள்ளது. பின்தங்கிய நிலையில் இருந்து தற்போது வளர்ச்சி பெறும் மாவட்டங்களில் 40 மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 9 ஆண்டுகளில், மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அரசியல் சுயநலத்துக்காகவும், ஓட்டு வங்கி அரசியலுக்காகவும் சில அரசியல் கட்சிகள் இந்திய மொழிகளுக்கு போதிய ஆதரவை அளிக்காமல் விளையாடின. இந்தக் கட்சிகள் கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்கள், பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் டாக்டர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆக விரும்பவில்லை. கிராமங்களில் உள்ள ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில்சேர பல சவால்களை சந்திக்கின்றனர். மருத்துவக் கல்வியை உள்ளூர் மொழிகளில் வழங்க, கடந்த காலங்களில் போதிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை. இப்பிரச்சினையை புரிந்து கொண்டு மருத்துவக் கல்வியை கன்னடம் உட்பட இந்திய மொழிகளில் பயில்வதற்கான வாய்ப்பை பாஜக தலைமையிலான அரசு ஏற்படுத்தி யுள்ளது.
கன்னடம் வளமான மொழி. இது நாட்டின் கவுரவத்தை உயர்த்துகிறது. முந்தைய அரசுகள் மருத்துவம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்விகளை கன்னடத்தில் கற்பிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள்அரசு ஏழைகளுக்கு சேவை செய்வதையே உயர்ந்த கடமையாக கருதுகிறது. ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் ஆரோக்கியத்துக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
நாடு முழுவதும் தற்போது சுமார் 10,000 மக்கள் மருந்தகங்கள் மூலம் ஏழைகளின் மருந்து செலவு குறைந்துள்ளது. முன்பு, ஏழைகளால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற கட்டணத்தை செலுத்த முடியாது. தற்போது ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம், ஏழைகளால் ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெற முடிகிறது.
இதய அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, டையாலிசிஸ் கட்டணங்கள் அதிகமான உள்ளன. இவற்றை குறைக்க தேவையான நடவடிக் கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.