புதுடெல்லி: பஞ்சாப் போலீஸாரால் தேடப்படும் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங், கடந்த 20-ம் தேதி அன்று அமிர்தசரஸில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து கோட், சூட் மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்து மாறுவேடத்தில் தப்பிச் சென்றது சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராக இருக்கும் அம்ரித்பால் சிங், பிரிவினைவாத செயல்களிலும், தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தில் புகுந்து வன்முறையிலும் ஈடுபட்டார். இதில் போலீஸார் பலர் காயம் அடைந்தனர். இவரை கைது செய்ய போலீஸார் விரட்டிச் சென்றபோது, அவர் வாகனங்கள், உடைகளை மாற்றி மாறுவேடத்தில் தப்பினார். இவரை போலீஸார் கடந்த ஒரு வாரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் அமிர்தசரஸில் தனது உறவினர் ஒருவர் வீட்டில் பதுக்கியிருந்த அம்ரித்பால் சிங், கடந்த 20-ம் தேதி கோட், சூட் மற்றும் கூலிங்கிளாஸ் அணிந்து தப்பிச் சென்றது, அங்குள்ள சிசிடிவி கேமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. அமிர்தசரஸில் இருந்து இவர் ஹரியாணாவின் குருஷேத்ராவுக்கு தப்பிச் சென்றுள்ளார். தனது முகத்தை மறைக்க கையில் குடையையும் எடுத்துச் சென்றுள்ளார்.
ஹரியாணாவின் குருஷேத்ராவில் அம்ரித்பால் சிங்குக்கும் அவரது உதவியாளர் பபல்ப்ரீத் சிங்குக்கும் பல்ஜீத் கவுர் என்ற பெண் அடைக்கலம் கொடுத்துள்ளார். அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். ஹரியாணாவில் இருந்து இவர் டெல்லி சென்றுள்ளார். பஸ் நிலையம் ஒன்றில் இவர் துறவி வேடத்தில் நேற்று முன்தினம் இறங்கியுள்ளார். டெல்லி காஷ்மீரி கேட் பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமிராக்களின் பதிவுகளை டெல்லி மற்றும் பஞ்சாப் போலீஸார் நேற்று ஆய்வு செய்தனர்.