டெல்லி: வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அமைதி வழியில் ‘சத்தியாகிரக’ உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டெல்லி ராஜ்காட் பகுதியில் இந்தப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பித்துள்ளனர்.
இருந்தும் காவல் துறையின் தடை உத்தரவை மீறி பிரியங்கா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களின் முன்னிலையில் அந்தப் பகுதியில் அமைதி வழியில் போராடி வருகிறார். அந்த கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அமைதி வழியில் போராட்டம் நடத்தும் திட்டம் தங்களுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது.
கோவா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் என நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டபடி அமைதிவழியில் போராட்டம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி டெல்லி காவல் துறையினர் போராட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். அதோடு ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளனர்.
மோடி சமூகம் குறித்து அவதூறாக பேசிய காரணத்திற்காக ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
LIVE: Sankalp Satyagraha, Raj Ghat, New Delhi. https://t.co/ElTyxe5nC3
— Congress (@INCIndia) March 26, 2023