மத்திய அரசு அலுவலகங்களில் `100% இந்தி' – ரயில்வே கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலியால் சர்ச்சை

மத்திய அரசு அலுவலகங்களில் 100% இந்தி மொழி அமல்படுத்துவதை வலியுறுத்தி தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்டத்தில் புதிய செயலி வெளியிடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தெற்கு ரயில்வே

கடந்த வியாழக்கிழமை (23.03.2023) தெற்கு ரயில்வேயின் மண்டல அலுவல் மொழி அமலாக்கக் குழுவின் 169-வது கூட்டம் நடைபெற்றது. தெற்கு ரயில்வேயின் கூடுதல் பொது மேலாளர் ஶ்ரீ கௌசல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அரசு அலுவலகங்களில் 100% இந்தி மொழி அமல்படுத்துவதை வலியுறுத்தி டாக்டர் ஏ.சீனிவாசன் என்பவர் ஒரு புதிய `டெமோ ஆப்’பை வெளியிட்டார். அதேபோல பொது மேலாளர் ஶ்ரீ கௌசல் கிஷோரும் `உடல் நலம்’ எனும் நூலை வெளியிட்டார்.

அந்தக் கூட்டத்தில் பேசிய உயர் அதிகாரிகள் பலரும், `இந்தியை பிரதானப்படுத்தியும், ரயில்வே பணியாளர்கள் இந்தி மொழி கற்கவேண்டியதன் அவசியம் குறித்தும்’ உரையாற்றியிருக்கின்றனர். மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் 100% இந்தி செயலி படிப்படியாக விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தென்னக ரயில்வே

இந்த நிலையில், `தெற்கு ரயில்வேயில் தமிழ், மலையாளம் என மாநில மொழிகளும் இருக்கும் நிலையில் இந்தியை மட்டும் பிரதானப்படுத்தி நூறு சதவிகிதம் இந்தியைத் திணிக்க முயல்வது கண்டிக்கத்தக்கது’ என பல்வேறு தரப்பினர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தி மொழி

குறிப்பாக சி.பி.எம் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை எம்.பி-யுமான சு.வெங்கடேசன், “தமிழ்நாட்டில் நூறு சதவிகிதம் இந்தி மொழி அமலாக்க சுற்றறிக்கையை தென்னக ரயில்வே பொதுமேலாளர் திரும்பப் பெற வேண்டும்” என கோரிக்கை வைத்திருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தெற்கு ரயில்வேயின் 169-வது அலுவல் மொழி அமலாக்கக் குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில், `உடல் நலம்’ பற்றிய ஒரு வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது. மேலும், 100% இந்தி மொழி அமலாக்கம் தொடர்பான பயிற்சி தரப்பட்டதாகக் கூறப்பட்டிருக்கிறது. உடல் நலம் போன்று தேச நலம் என்பதையும் கருத்தில் கொண்டு அலுவல் மொழி விதிகளை அங்கு விவரித்து இருக்கலாம். 100% இந்தி என்று அலுவல் மொழி விதிகளில் கூறவில்லை.

சு.வெங்கடேசன்

இதனால்தான் மாநிலங்கள் நான்காக பிரிக்கப்பட்டிருக்கின்றன. எங்கு இந்தி கட்டாயம், எங்கு தெரிவு, எங்கு கட்டாயமில்லை, எங்கு அலுவல் மொழிகளே பொருந்தாது என அமலாக்க விதியில் கூறப்பட்டிருக்கிறது. இதனை தெற்கு ரயில்வே அலுவல் மொழி ஆய்வுக்குழு அறிந்திருக்க வேண்டும். இதில் நான்காவது வகையில் தமிழ்நாடு வருகிறது. தமிழ்நாட்டுக்கு அலுவல் மொழி விதிகளிலிருந்து 100% விதிவிலக்கு தரப்பட்டிருக்கிறது. விதிகளில் உள்ளதை விட்டுவிட்டு, உங்கள் மனதிலுள்ள ஆசைகளையெல்லாம் நிறைவேற்ற முயலக்கூடாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “தெற்கு ரயில்வே தமிழில் செய்ய வேண்டியவை நிறைய இருக்கிறது. எனவே, உடல் நலத்துக்கு எதை சாப்பிடலாம்… எதை சாப்பிடக்கூடாது என்று வழிகாட்டல் கூட்டத்தில் தரப்பட்டிருப்பது போல் அலுவல் மொழி விதிகள், `எதை செய்ய சொல்லி இருக்கின்றன.. எதை செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கின்றன’ என்பதையும் தெற்கு ரயில்வே தெரிந்துகொள்ள வேண்டும். தெற்கு ரயில்வே பொது மேலாளர் உரிய முறையில் அலுவல் மொழி ஆய்வுக்குழுவை அறிவுறுத்த வேண்டும். அதன் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும்” என்ற கோரிக்கையை வலியுறுத்தியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.