தென்னிந்திய சினிமா உலகில் பிரபல நடிகராக இருப்பவர் இன்னொசென்ட். மலையாள நடிகரான அவர், காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர். மலையாளத்தை தாண்டி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.’லேசா லேசா’, ‘நான் அவளை சந்தித்தபோது’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகர் இன்னொசென்ட்..சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசு விருதுகளைப் பெற்றுள்ள இன்னொசென்ட், மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார்.
நடிகர், அரசியல்வாதி, பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட இவருக்கு கடந்த 2012ம் ஆண்டு தொண்டைப் புற்றுநோய் ஏற்பட்டு அதற்காகச் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார்.அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பரிசோதனையில் மீண்டும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் இன்னசென்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.