யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் காப்பிடப்பட்ட மின்கம்பிகள் அமைப்பது குறித்து ஆய்வு செய்ய கோவை மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், நாயக்கன்பாளையம் தெற்கு சுற்று, தடாகம் காப்புக்காட்டிற்கு வெளியே சுமார் 1 கி.மீ. தொலைவில் க.ச.எண்.182/2, கூடலூர் தெற்கு வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பட்டா நிலத்தில் இருந்த மின்கம்பத்தில் இன்று 25.03.2023 காலையில் சுமார் 25 வயதுடைய ஆண் யானை ஒன்று தலையை வைத்து உரசிய போது கம்பம் உடைந்து சரிந்ததில், மின் கம்பிகள் யானை மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இந்நிகழ்வினை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூர் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர்கள் (வடக்கு மற்றும் தெற்கு) ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் இன்று மாலை நடைப்பெற்றது. கூட்டத்தில் மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
வனப்பகுதியை ஒட்டிய 1 கி.மீ. முதல் அதிகபட்சமாக 5 கி.மீ. சுற்றளவு கொண்ட பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் உள்ள பகுதிகளை வரைப்படங்களில் வரையறுத்து அப்பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்கம்பங்களை கண்டறிந்து உடன் சரிசெய்தல்.
மேலும், இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படாமல் தடுக்க வனங்களை ஒட்டிய பகுதிகளில் உயர் மின்கம்பங்கள் அமைத்தல், காப்பிடப்பட்ட மின்கம்பிகளை பயன்படுத்துதல், மின்கம்பங்களை சுற்றி தடுப்பு வேலிகள் அமைத்தல் போன்ற வழிமுறைகளை வகுத்து தொலைநோக்கு நடவடிக்கை மேற்கொள்வது.
வனத்துறை மற்றும் மின்வாரிய பணியாளர்களுடன் காப்புக்காட்டை ஒட்டிய பகுதிகளில் மின் வேலிகள் மற்றும் மின்கம்பிகள் ஆய்வு செய்ய கூட்டு புலத்தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இக்கூட்டுப்புலத்தணிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், மின்சாரம் தாக்கி யானை இறப்பதை தடுப்பது மற்றும் மனிதவனவிலங்கு முரண்பாடுகளை தவிர்ப்பதை குறித்து வருவாய் வட்ட அளவில் வட்டாச்சியர், வனச்சரக அலுவலர், காவல் ஆய்வாளர் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.