ஏப்ரல் 1 முதல் மாற்றங்கள்: 2022-23 நிதியாண்டு முடிவடைய இன்னும் சில திங்களே உள்ளது. இதனுடன், பல புதிய விதிகள் புதிய நிதியாண்டு மற்றும் ஏப்ரல் மாதத்திலிருந்தும் பொருந்தும். இந்த விதிகள் சாமானியர்களையும் பாதிக்கப் போகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஏப்ரல் 1, 2023 முதல் நிகழும் புதிய மாற்றங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்த மாற்றங்கள் நிதி பரிவர்த்தனைகள், தங்க ஆபரணங்கள் போன்றவற்றுடன் தொடர்புடையவை. ஏப்ரல் 1, 2023 முதல் எந்த விதிகள் மாறப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.
பான் கார்டு-ஆதார் கார்டு இணைப்பு
31 மார்ச் 2023க்குள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பது அவசியம். இதற்குப் பிறகு, ஏப்ரல் 1, 2023 முதல், ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு இணைக்கப்படாவிட்டால், பான் கார்டு செயலிழந்துவிடும். பான் கார்டு செயலிழக்கப்படுவதால் வருமான வரி தாக்கல் செய்வதில் மக்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும், மேலும் அதிக வரியும் வசூலிக்கப்படும். பான் கார்டு செயலிழந்ததால் மக்கள் நிதி பரிவர்த்தனைகள் செய்வதிலும், வருமான வரி தாக்கல் செய்வதிலும் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தங்க நகை விற்பனை
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஹால்மார்க் பிரத்யேக அடையாள எண் இல்லாமல் தங்க நகைகளை விற்பனை செய்ய முடியாது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது. நுகர்வோரின் நலன்களைக் கருத்தில் கொண்டு, மார்ச் 31, 2023க்குப் பிறகு, HUID ஹால்மார்க் இல்லாத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலை
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, பெட்ரோல்-டீசல் மற்றும் எரிவாயுவின் புதிய விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் வெளியிடுகின்றன. கடந்த மார்ச் மாதமே எல்பிஜி விலை உயர்த்தப்பட்டது. இவ்வாறான நிலையில் இம்முறையும் ஏப்ரல் 1ஆம் தேதி எரிபொருள் விலையில் மாற்றம் காணப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.