டெல்லி: தான் ஒரு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி என தனது சமூக வலைதள பக்க பயோவை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மாற்றியுள்ளார். மோடி சமூகத்தை சார்ந்தவர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை பாராளுமன்ற செயலகம் அறிவித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக நேற்று தனது தரப்பு விளக்கத்தை ராகுல் காந்தி, பத்திரிகையாளர் சந்திப்பின் போது விளக்கியிருந்தார். தொடர்ந்து பதவி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் போராட்டங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் தனது கணக்கின் பயோவில் ‘தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி’ என ராகுல் காந்தி மாற்றியுள்ளார். ‘இது ராகுல் காந்தியின் அதிகாரப்பூர்வ கணக்கு. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி’ என இப்போது தனது பயோவை அவர் மாற்றியுள்ளார். முன்னதாக, வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினர் என தனது பயோவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.