மக்கள் கொடுத்த பதவியில் இருந்து ராகுல் காந்தியை நீக்கி இருப்பது ஜனநாயக படுகொலை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சென்னை ஜாபர்கான் பேட்டை, கங்கையம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின், குருதிக் கொடை பாசறை தலைமை அலுவலகம், திலீபன் குடிலை, அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார். இதையடுத்து குருதிக் கொடை உதவி எண், புத்தகம் மற்றும் இணையதளம் உள்ளிட்டவற்றை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், “தமிழ் தேசிய இனத்தின் மக்களாகிய நாங்கள் எங்கள் இன விடுதலைக்காக வேர்வை, இரத்தம் சிந்தி போராடினோம் என்பதை உலகிற்கு உணர்த்த 2010 ஆம் ஆண்டு முதல் குருதிக் கோடை பாசறையை கொடை கொடுக்கும் படை என்ற பெயரில் தொடங்கி தமிழகத்தில் மட்டுமில்லாமல் எல்லா நாடுகளிலும் உறுப்புகளையும் குருதியையும் கொடையாக கொடுக்க ஏற்பாடு செய்துள்ளோம்.
எப்போது அழைத்தாலும் என்ன இரத்த பிரிவு என்றாலும் இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு குருதிக் கொடை அளித்து உள்ளோம். இதில், எந்த சாதி ரத்தம் என்று கேட்பதில்லை. எங்கள் ரத்தம் எல்லார் உடலிலும் ஓடுகிறது. இது எங்கள் பெருமை இல்லை, கடமை. உண்மையில் நாங்கள் தான் ரத்தத்தின் ரத்தங்கள்” என்றார்.
ராகுல் காந்தி விவகாரம் குறித்து பேசிய அவர், “காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் குடும்பம் எங்கள் இனத்தை கொன்று குவித்தது அந்த வலியும் கோபமும் இன்னும் இருக்கிறது. ஆனால், ராகுல் காந்தியை வீழ்த்த அவரின் பதவி பறிப்பு சரியான கருவி இல்லை. மக்கள் கொடுத்த பொறுப்பை பறிப்பது ஜனநாயக படுகொலை, அதை ஏற்க முடியாது. அவருக்கு சிறை தண்டனை கொடுத்தது வேடிக்கையானது, இதை விட மோசமாக பாஜக நிர்வாகிகள் பேசி உள்ளனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
எதிர் கட்சியாக இருக்கும் போது மோடி பேசி இருகிறார். இந்த விசயத்தில், சாமானிய மக்களுக்கு இருக்கும் சட்டம் தான் பின்பற்றப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது, நீரவ் மோடி, லலித் மோடி உள்ளிட்டோர் மீதும் அதே போல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இவ்வளவு பெரிய குடும்ப பின்னணி இருக்கும் ராகுல் காந்திக்கு இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலைமை ஏற்படும். எதிர்காலத்தில் மக்களாட்சி ஜனநாயகம் என்ற அமைப்பு இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது” என்று தனது கருத்துக்களை முன்வைத்தார்.
ஆளுநர் பதவி குறித்து பேசிய சீமான், ”ஆன்லைன் ரம்மி எப்படி பார்த்தாலும் சூதாட்டம் தான் அதை தடை செய்யத்தான் வேண்டும். இது பற்றி ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் பாடம் வைத்துவிட்டு அறிவுத்திறன் மேம்பாடு என்று சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆளுநரின் அதிகார எல்லை என்ன? அவரின் பதவி எதற்கு. தேவையில்லாமல் மக்களின் வரி பணத்தில் அத்தனை பெரிய மாளிகை, காவல்துறை பாதுகாப்பு எதற்கு? மக்கள் நலனுக்காக ஒரு சட்டத்தை கொண்டு வரும்போது அதை ஏற்க முடியாது, கையெழுத்து போட முடியாது என்று சொல்லுவதற்கு நீங்கள் யார்? அரசு ஆளுநரை மதிக்காமல் செல்ல வேண்டியது தானே, ஏன் மதிக்க வேண்டும்” என்று கேள்விகளை அடுக்கினார். .
2024 இல் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்த கருத்துக்கு, அவருடை நம்பிக்கைக்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM