ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனியுடன் இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்று போட்டிருக்கிறது. அதன்படி, 2035-ம் ஆண்டுக்குள் புதிய கார்கள் அனைத்தும் கார்பன் நியூட்ரலாக இருக்கும்.
மார்ச் 16-ம் தேதி நடந்த ஏவுகணை சோதனையின்போது, வட கொரிய அதிபரின் மகள் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நாட்டு மக்கள் பஞ்சத்தில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தத் தகவல் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது.
அமெரிக்காவின் மிஸ்ஸிசிப்பி மாகாணத்தில் சூறாவளியின் கோரத் தாண்டவத்தில் சிக்கி 25-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கானுக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட மூன்று பயங்கரவாத வழக்குகளில் ஏப்ரல் 4-ம் தேதி வரை பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்கியிருக்கிறது. கடந்த 11 மாதங்களில் மட்டும், இம்ரான் கான்மீது 140 பயங்கரவாத வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா தனது சீன பயணத்தை ஒத்திவைத்தார். Bronchopneumonia என்ற வைரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் லூலா, இந்த மாத இறுதிக்கு சீனப் பயணத்தை ஒத்திவைத்திருக்கிறார்.
ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மஸ்க், நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்கு மானியங்களை வழங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
சிலியின், தாரபாகா பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவுசெய்யப்பட்டது.
இன்டெல் இணை நிறுவனரான கோர்டன் மூர், 94 வயதில் காலமானார். கணினி செயலாக்கச் சக்திகள் ஒவ்வொரு ஆண்டும் இரட்டிப்பாகும் என்று கணித்தவர் இவரே (Moore’s Law) .
அண்டை நாடான பெலாரஸுடன் மாஸ்கோ தனது எல்லையில் அணு ஆயுதங்கள் நிலைநிறுத்த ஒப்பந்தம் செய்திருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2024-க்கான தேர்தல் பிரசாரத்தின் முதல் பேரணியை டாகோவில் தொடங்கினார். தனக்கு எதிராகத் தொடுக்கப்படும் விசாரணைகளைக் கண்டித்து ட்ரம்ப் அதில் உரையாற்றினார்.