ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய இன்ஸ்டா ராணி!! எப்படி எல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்து வருபவர் ராஜேஷ் (44). இவர் செம்பூர் ரயில் நிலையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பின்பு லோரேன் மூலமாக அவரது சகோதரி ஹேசல் ஜேம்ஸ், இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ராஜேஷ்க்கு நண்பர் ஆனார். அறிமுகத்திற்கு பின்னர் ஹேசல் ஜேம்ஸ்ம், ராஜேஷும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர்.

கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வரும் ஹேசல் ஜேம்ஸ், தான் திருமணம் ஆகாத பெண் என்று கூறி ராஜேஷ் உடன் பழகி வந்துள்ளார். சிறிது நாட்கள் கழித்து தனக்கு திருமணமாகிவிட்டது என்றும் கணவர் இறந்து விட்டதாகவும் கூறினார். பின்னர் மீண்டும் கணவர் இறக்கவில்லை என்றும் விவாகரத்து வழக்கு கோவை நீதிமன்றத்தில் இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

மேலும் தனக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பதாகவும் தந்தையுடன் வசித்து வருவதால் தனக்கு நிறைய கஷ்டங்கள் இருக்கிறது என தெரிவித்து ரூ.90 ஆயிரம் கடனாக ராஜேஷ் இடமிருந்து பெற்றுள்ளார். தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ் தான் சொந்தமாக தொழில் செய்வதாகவும் அதற்கு உதவி செய்யுமாறு கூறியுள்ளார்.

ஹேசல் ஜேம்ஸ்க்கு உதவ நினைத்த ராஜேஷ், ரூ.20 லட்சம் மதிப்பிலான பணம், அழகு சாதன பொருட்கள், விலை உயர்ந்த செல்போன், ஸ்கோடா கார் ஆகியவற்றை வாங்கி ஹேசலுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து தான் ராஜேஷுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஹேசல் ஜேம்ஸ்க்கு ராணுவ வீரர் ஜஸ்டின் என்பவரிடம் தொடர்பு இருந்தது ராஜேஷுக்கு தெரியவந்தது. மேலும் இதே போல பல ஆண்களிடம் ஹேசல் ஜேம்ஸ் பழகி வந்தது ராஜேஷ்க்கு தெரிய, அவர் அதிர்ந்து போனார்.

இது குறித்து ஹேசல் ஜேம்ஸிடம் கேட்டபோது, ஹேசல் ஜேம்ஸ் ‘என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது’ என்றும் கூறி பேரிடியை கொடுத்தார். இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து ஹேசல் ஜேம்ஸ், ராஜேஷ் உடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அதன் பிறகு ஹேசலை தொடர்பு கொண்ட ராஜேஷ், தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார்.

அப்போது ஹேசல் ஜேம்ஸ் பணத்தை திருப்பி தர முடியாது என்றும் பணத்தை திருப்பி கேட்டால் தன் இரண்டு குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி இருக்கிறார். பயந்து போன ராஜேஷ் மீண்டும் சில நாட்கள் அமைதியாக இருந்து, சில நாட்களுக்கு பிறகு தனது பணத்தை கேட்டுள்ளார். அப்போது ஹேசல் ஜேம்ஸ், ‘20 லட்சம் ரூபாய் பணத்தை உனக்கு கொடுப்பதற்கு பதில் 2 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தால் உன்னை கொல்வதற்கு ஆள் இருக்கிறது’ என கூறி மிரட்டி இருக்கிறார்.

இதனையடுத்து, கோவைக்கு வந்த ராஜேஷ் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஹேசல் ஜேம்ஸ் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஹேசல் ஜேம்ஸ் பலரிடம் திருமணம் செய்து கொள்வதாக மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து போத்தனூர் போலீசார் மும்பை தொழிலதிபர் ராஜேஷ்-ஐ ஏமாற்றி பழகி பணம் பறித்தது தொடர்பாகவும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் ஹேசல் ஜேம்ஸ் மீது 420, 406, 506 (2) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.