சேலம் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை மத்திய ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் 75 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அம்ரித் பாரத் திட்டம்
இவற்றில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஜவுளி உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர் பயன்பெறும் வகையில் சரக்கு ரயில் போக்குவரத்து மேம்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
வந்தே பாரத் ரயில்
நாடு முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும். தமிழகத்தில் தேவைப்படும் இடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வரும் ஏப்ரல் 8ஆம் தேதி முதல் சென்னை டூ கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய அமைச்சர், சேலம் ரயில் கோட்டத்தில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திய பின்னர் புதிய ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சேலம் தொழில் வளர்ச்சி
ரயில்களின் வேகத்தையும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சேலத்தைச் சேர்ந்த தொழில்முனைவோர் பயன்பெறுவர். அசல் பட்டு சேலைகள், பருத்தி புடவைகள் இப்பகுதியில் அதிகளவில் தயாரிக்கப்படுவதால் நெசவாளர்களுக்கு பயன் கிடைக்கும். பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் பல்வேறு இடங்களில் சரக்கு முனையம் மேம்படுத்தப்பட்டு உள்ளதால் சரக்கு ரயில் போக்குவரத்து நாடு முழுவதும் அதிகரித்துள்ளது எனக் கூறினார்.
ராகுல் காந்தி தகுதி நீக்கம்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து கேள்விக்கு, பிரதமரை இழிவுபடுத்துவதாக நினைத்து ராகுல் காந்தி ஒரு பெரிய சமுதாயத்தையே இழிவுபடுத்தி விட்டார். இது கண்டிக்கத்தக்கது. ஒரு சமுதாயத்தின் மீது ராகுல் காந்திக்கு ஏன் இவ்வளவு கோபம் எனத் தெரியவில்லை. அந்த சமுதாயத்தை திட்டியதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற விவகாரம்
இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்ற ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமே காரணம். தன்னுடைய தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண இன்னும் ஒருமாத கால அவகாசம் உள்ளது.
ஆனால் காங்கிரஸ் கட்சியினர் நீதிமன்றத்திற்கு சென்று இதுபற்றி பேசாமல் நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல் செய்யும் போது, அங்கு ராகுல்காந்தி பற்றி பேச வேண்டும் என அமளியில் ஈடுபடுகின்றனர். ராகுல் காந்தி பிரச்சினைக்கு பேச வேண்டிய இடம் நீதிமன்றம் தானே தவிர, நாடாளுமன்றம் கிடையாது என்று அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் தெரிவித்தார்.