திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தப்பட்டதாக புகாரளிக்கப்பட்ட 10 மணி நேரத்தில் கடத்தி சென்ற பெண்ணை போலீசார் கைது செய்து குழந்தையை மீட்டுள்ளனர்.
செரங்காடு பகுதியை சேர்ந்த கோபி என்பவரின் மனைவி சத்யாவுக்கு 19ஆம் தேதி குழந்தை பிறந்த நிலையில், நேற்று இவரை வேறு வார்டுக்கு மாற்றியுள்ளனர். அப்போது, மூன்று நாட்களாக பிரசவ வார்டில் சுற்றித் திரிந்த பாண்டியம்மாள் என்பவர், லிப்டில் சென்றால் குழந்தைக்கு ஒத்துக் கொள்ளாது எனவே நான் படி வழியாக தூக்கி வருகிறேன் என்று குழந்தையை வாங்கியுள்ளார்.
வார்டிற்கு வந்தவுடன் குழந்தையை கேட்டபோது, குழந்தையை சத்யாவின் மாமியாரிடம் கொடுத்துவிட்டதாக தெரிவித்துவிட்டு, அந்த பெண் அவசரமாக வெளியேறியுள்ளார்.
குழந்தை மாமியாரிடமும் இல்லாததால் அதிர்ச்சியடைந்த சத்யா புகார் அளித்ததையடுத்து 5 தனிப்படை அமைத்து சிசிடிவி பதிவுகளை வைத்து தேடியதில் குழந்தையை கடத்திய பாண்டியம்மாள் சிக்கினார்.
42 வயதாகும் பாண்டியம்மாளின் மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பது போல் கணவரிடம் நடித்து வந்தவர், குழந்தையை கடத்தி சென்று தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து, கணவர் முத்துசண்முகம், பாண்டியம்மாள் ஏறிச் சென்ற ஆட்டோவின் டிரைவர் உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.