பாட்னா: பீகாரில் மதுபானம் கிடைக்காததால் ஆத்திரமடைந்த ஒருவர், அம்மாநில முதல்வர் வீட்டை குண்டு வைத்து தகர்ப்போம் என்று மிரட்டல் விடுத்தார். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டம் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த அங்கித் குமார் என்பவர், குஜராத் மாநிலம் சூரத்தில் பணியாற்றி வருகிறார். மது அருந்தி பழகிய அவர், ஹோலி பண்டிகையின் போது குஜராத்தில் இருந்து தனது கிராமத்திற்கு வந்தார். பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளதால், அவருக்கு மது கிடைக்கவில்லை. மேலும் பீகாரில் மதுவிலக்கை அமல்படுத்திய முதல்வர் நிதிஷ் குமார் மீது மிகவும் கோபமாக இருந்தார்.
மீண்டும் குஜராத் சென்ற அங்கித் குமார், அங்கு மதுவை குடித்துவிட்டு போதையில், பாட்னா காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘பீகாரில் மது கிடைக்கவில்லை. அதவால் முதல்வர் நிதிஷ் குமாரின் வீட்டை குண்டுவீசித் தகர்க்கப் போகிறோம்’ என்று கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டார். அதிர்ச்சியடைந்த பீகார் போலீசார், செல்போனில் வந்த மிரட்டல் எண்ணின் அடிப்படையில் குஜராத்தில் இருந்த அங்கித் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரித்தபோது, அவர் போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அதையடுத்து அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.