கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு அதிரடியாக சில நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. அதில், முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் EWS எனப்படும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இட ஒதுக்கீட்டில் மாற்றம்
இந்த பிரிவிற்கு மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. இதில் பிராமணர்கள், வைஷ்யர்கள், முதலியார்கள், ஜெயின் உள்ளிட்ட சமூகத்தினர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் இட ஒதுக்கீட்டிற்காக இனி கர்நாடக முஸ்லீம்கள் போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை பிரித்து ஒக்கலிகாவிற்கு 2 சதவீதம், லிங்காயத்திற்கு 2 சதவீதம் என வழங்கியுள்ளனர்.
பஞ்சாமாசாலி லிங்காயத்துகள் எதிர்ப்பு
இந்த இரண்டு சமூகத்தினர் கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் நிலையில் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய இடத்தில் இருக்கின்றனர். அதை கருத்தில் கொண்டு பாஜக அரசு மேற்குறிப்பிட்ட வகையில் இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கும் எனத் தெரிகிறது. இந்த நடவடிக்கைக்கு பஞ்சமாசாலி லிங்காயத்துகள் பலர் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
விஜயானந்த் காஷப்பா ராஜினாமா
இதில் அனைத்திந்திய பஞ்சமாசாலி லிங்காயத்து அமைப்பை சேர்ந்த விஜயானந்த் காஷப்பா தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக பெங்களூரு நகரில் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய விஜயாந்த காஷப்பா, முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து பஞ்சமாசாலி லிங்காயத்து பிரிவினருக்கு வழங்குவதை ஏற்க முடியாது.
பெரும்பான்மை சமூகம்
எனவே என்னுடைய பதவியை உடனே ராஜினாமா செய்கிறேன் என்று அதிரடியாக பேசி பரபரப்பை கிளப்பினார். இதைக் கேட்டதும் சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சமாதானம் செய்ய முயற்சித்தும் எதுவும் பலனளிக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் உயர் சாதி பிரிவாக லிங்காயத்து கருதப்படுகிறது. இவர்கள் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் 18 சதவீதம் அடங்குவர்.
பிரித்தாளும் பாஜக
அதுவே ஒட்டுமொத்த லிங்காயத்து சமூகத்தில் 60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் முஸ்லீம்களுக்கு ஆதரவாக பஞ்சமாசாலி லிங்காயத்துகளை சேர்ந்த பலர் குரல் கொடுத்து வருவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பாஜகவின் பிரித்தாளும் அரசியலில் சிக்காமல் ஒன்றிணைந்து செயல்பட விரும்புவது பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் ஒக்கலிகா மற்றும் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த மக்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் ஏழைகள் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களாக கருதப்படும் முஸ்லீம்களிடம் இருந்து இட ஒதுக்கீட்டை பறித்து தங்களுக்கு வழங்குவதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பாஜக தப்பு கணக்கு போட்டு விட்டதாக விமர்சனம் செய்துள்ளனர்.