மத வேறுபாடு இன்றி ஆலங்குடி சிவன் கோவிலில் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அமைந்துள்ள இரண்டாவது குருஸ்தலமாக விளங்கக்கூடிய ஶ்ரீ தர்மஸம்வர்த்தினி சமேத ஶ்ரீ நாமபுரீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நாளைய தினம் நடைபெற உள்ளது. இந்த கோவில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. சுமார்  700 ஆண்டுகளுக்கு முந்தைய கோவிலான இந்தக் கோவிலின் குடமுழுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தலைமையில் நாளை விமர்சியாக நடைபெற உள்ளது.

இங்கு சிறப்பு என்னவென்றால், இந்த குடமுழுக்கிற்கு ஆலங்குடி நகரில் உள்ள அனைத்து இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் பாரம்பரிய முறைப்படி நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர்.

இதனையடுத்து இந்த அழைப்பை மதித்து, ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயம், ஆலங்குடி பெரிய பள்ளிவாசல் மற்றும் கலிபுல்லா நகர் ஜூம்மா பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் இருந்து இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் பாரம்பரிய முறைப்படி சீர்வரிசை கொண்டு வந்தனர். மேலும் அங்கு வருகை தந்த இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்களை மேள தாளங்கள் மற்றும் நாதஸ்வரம் முழங்க கோவில் நிர்வாகத்தினர் உற்சாகமாக வரவேற்றனர்.

அதன் பின்னர், கோவிலின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர்கள், முறைப்படி தாம்பூலங்களில் கொண்டு வந்த மலர், பழங்கள், இனிப்புகள் மற்றும் தேங்காய் உள்ளிட்ட சீர்வரிசைகளை யாகசாலையில் வைத்து கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.

மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக மத வேறுபாடு இன்றி ஆலங்குடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும். இது போன்ற நிகழ்ச்சிகள் இப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.