வாஷிங்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் பொறுப்பேற்றது முதல் பஞ்சாப் மாநிலத்தில் காலிஸ்தான் பிரிவினைவாதக் கொள்கைகள் தலைதூக்கின. இதையடுத்து அவரை கைது செய்ய பஞ்சாப் காவல்துறை முனைப்பு காட்டிவருகிறது. அதைக் கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை செய்தியாக்கிக் கொண்டிருந்த பிடிஐ செய்தி நிறுவனத்தின் ஊடகவியலாளர் லலித் குமார் ஜா என்பவர் காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.
இதுகுறித்து லலித் ஜா கூறுகையில், ‘என்னைப் பாதுகாத்துக் கொள்ளவும், எனது பணிக்கு பாதுகாப்பு வழங்கிய போலீசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காலிஸ்தான் ஆதரவாளர்கள் எனது இடது காதில் இரண்டு குச்சிகளால் தாக்கினர். அப்போது போலீசார் தலையீட்டால் காப்பாற்றப்பட்டேன். போராட்டக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று போலீசாரை கேட்டுக் கொண்டேன்’ என்றார்.
பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம், காலிஸ்தான் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது. மேலும், தூதரகத்தில் தேசியக் கொடியை அகற்றிவிட்டு, காலிஸ்தான் கொடியை ஏற்றியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, தங்கள் நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாகத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM