ராய்ப்பூர்,
நாட்டில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எப்.) 84-வது எழுச்சி தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சத்தீஷ்காரில் அதற்கான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக 75 சி.ஆர்.பி.எப். வீராங்கனைகள் டெல்லியில் இருந்து சத்தீஷ்கார் நோக்கி 1,800 கி.மீ. தொலைவை பைக்கில் கடந்து சென்றனர்.
இந்த நிலையில், சி.ஆர்.பி.எப். படையின் மோப்ப நாய் வளர்ப்பு மற்றும் பயிற்சி பள்ளியின் துணை தளபதியாக உள்ள மகேந்திர ஹெக்டே கூறும்போது, நாடு முழுவதும் மோப்ப நாய்கள் பணியில் சேர்க்கப்பட்டது முதல், இதுநாள் வரையில் 5 ஆயிரம் கிலோ எடை கொண்ட வெடிபொருட்களை சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைப்பற்றுவதற்கு அவை உதவி புரிந்து இருக்கின்றன.
அரை கிலோ எடையளவு கொண்ட ஒரு வெடிபொருளால் பெரிய அளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளை ஏற்படுத்த கூடிய சூழலில், இந்த அளவுக்கு ஏற்படும் சேதம் பற்றி நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை குறித்து அவர் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த மோப்பசக்தி படைத்த பிராணிகள் எண்ணற்ற பாதுகாப்பு வீரர்களின் உயிரை காப்பாற்றி உள்ளது என கூறியுள்ளார். இதுவரை கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களில் 80 சதவீதம் நக்சலைட்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
சத்தீஷ்காரின் ஊடுருவல் நிறைந்த மாவட்டங்களில் மொத்தம் 500 மோப்ப நாய்கள் பணியில் உள்ளன. எனினும், அவற்றின் தேவை இன்னும் கூடுதலாக உள்ளது என அவர் குறிப்பிடுகிறார்.
இந்த வகை மோப்ப நாய்கள் தாக்குதல் நடப்பதற்கு முன்பே அதுபற்றிய எச்சரிக்கை தருவதற்கும், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கண்டறிவதற்கும் மற்றும் தேச விரோத சக்திகளை எதிர்கொள்வதற்கும் வேண்டிய பயிற்சிகள் பெறுகின்றன.
இந்த பயிற்சியை பெற்ற பின்னர் காஷ்மீர், சத்தீஷ்கார், ஜார்க்கண்ட், பீகார், ஒடிசா மற்றும் பிற பகுதிகளுக்கும் பணிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அவை வீரர்களுக்கு முன், தங்களது உயிரை பணயம் வைத்து முன்னேறி சென்று, வெடிகுண்டுகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கண்டறியும் பணியை மேற்கொள்கின்றன.