புதுடெல்லி: உலகம் முழுவதும் ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாட்டால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதலில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் பெரும்பாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பராமரிக்கவும், கொள்ளுமுதல் செய்யவும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் மிகக் குறைந்தளவே தேர்தல் ஆணையம் பயன்படுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022-2023ம் நிதி ஆண்டில் ஜனவரி 31ம் தேதி வரை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 16% அளவிற்கே தேர்தல் ஆணையம் பயன்படுத்தியது. இதற்கு காரணம், உலகம் முழுவதும் செமிகண்டக்டர்களுக்கு (மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பி.ஏ.டி இயந்திர தயாரிப்பதற்கான எலக்ட்ரானிக் மூலக்கூறு) தட்டுப்பாடு நிலவுவதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியில் தாமதமாவதாக கூறப்படுகிறது.
இதற்கான அறிக்கையை, கடந்த பிப்ரவரி மாதம் பாஜக எம்பி சுஷில் குமார் மோடி தலைமையிலான நாடாளுமன்ற குழுவிடம் தலைமை தேர்தல் ஆணையம் சமர்பித்துள்ளது. குழுவிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், ‘கடந்த நிதியாண்டின் இறுதிக்குள் (மார்ச்) மின்னணு வாக்குப்பதிவு வாங்குவதற்காக ஒதுக்கப்பட்ட ரூ.1,500 கோடி பயன்படுத்த முடியும். ஆனால் உலகளாவிய ‘செமிகண்டக்டர்’ தட்டுப்பாடு நிலவுவதால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொள்முதல் செய்வதிலும், உற்பத்தி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் குறைந்தளவு நிதிமட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2021-2022ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.1,000 கோடியும், 2022-2023ம் ஆண்டில் ரூ.1,500 கோடியும், 2023-2024ம் ஆண்டில் ரூ.1,866.78 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்காக கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022-23ம் ஆண்டிற்கு ஒதுக்கப்பட்ட ரூ .1,500 கோடியில், ஜனவரி 31ம் தேதி வரை ரூ.240.86 கோடியை தேர்தல் ஆணையம் பயன்படுத்தியுள்ளது. ரூ.598.84 கோடி மதிப்புள்ள பில்கள் சட்ட அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவை அங்கீகரிக்கப்பட்டவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர்களுக்கு பணம் செலுத்தப்படும். மீதமுள்ள பட்ஜெட் ஒதுக்கீடு நிதியை, நடப்பு நிதியாண்டில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.