திண்டிவனம்: பிரதமர் மோடி குறித்து சர்ச்சை கருத்து கூறியது தொடர்பாக குஜராத் நீதிமன்றம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்ததால், எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம், சூரத்தில் அவதூறு வழக்கில் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதேபோல் நேற்று திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில், காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலம் காவல் நிலைய போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், நகர தலைவர்கள் விநாயகம், குமார், சூரியமூர்த்தி, வட்டார தலைவர்கள் செல்வம், இளவழகன், புவனேஸ்வரன், காத்தவராயன், ஜனார்த்தனம், துணை அமைப்பு நிர்வாகிகள் உதயானந்தம், ராமமூர்த்தி, கோபாலகிருஷ்ணன், சக்திவேல், வெங்கட், ஜெய்கணேஷ், அஜித்குமார், கலிவரதன், சந்திரன், கோதண்டபாணி, அஜிஸ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.