லாகூர்: பாகிஸ்தான்-தெஹ்ரி-இ-இன்சாப் கட்சி தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீது, பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பல்வேறு வழக்குகளில் அவரை கைது செய்ய பாகிஸ்தான் போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், 9 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்நிலையில், லாகூரில் உள்ள மினார்-இ பூங்காவில் பேரணிக்கு இம்ரான் கான் கட்சி அழைப்பு விடுததிருந்தது. இதற்கு தடை விதித்த அரசு இணையதள சேவைகளை துண்டித்ததுடன், பேரணி நடைபெறும் இடத்துக்கு செல்லும் சாலைகளில் பல்வேறு தடுப்புகளை ஏற்படுத்தினர்.
போலீசாரின் தடைகளையும், அச்சுறுத்தல்களையும் மீறி லாகூரின் மினார்-இ பூங்காவுக்கு ஆயிரக்கணக்கான பெண்கள் உள்ளிட்ட கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் நடந்தே சென்று பேரணியில் கலந்து கொண்டனர்.
குண்டு துளைக்காத வாகனத்தில் இருந்தபடி இம்ரான் கான் மாபெரும் பேரணியை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய இம்ரான் கான். “இந்த பேரணியில் திரண்டுள்ள கூட்டத்தை பார்க்கும்போது, அரசு விதிக்கும் எந்த தடையும் மக்களை கட்டுப்படுத்தாது என்பதை காட்டுகிறது. நாட்டின் அதிகார சக்திகள் இப்போது நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால், ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு ஒரே பிரச்னையாக இம்ரான் கான் தான் என்பதாக இருக்கிறது. சட்டத்தின்படி ஆட்சி நடக்கா விட்டால் பாகிஸ்தானுக்கு நல்ல எதிர்காலம் இல்லை. பாகிஸ்தானை சீரமைக்க பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது” இவ்வாறு ஆவேசமாக பேசினார்.