பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மான் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். நேற்று அவர் தனது 99-வது மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
மான் கீ பாத்தின் 100-வது நிகழ்ச்சி குறித்து நாட்டு மக்களிடையே மிகுந்த உற்சாகம் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 100-வது நிகழ்ச்சி தொடர்பான உங்கள் ஆலோசனைகளையும் எண்ணங்களையும் அறிய ஆவலாக உள்ளேன்.
இந்தியாவிற்கு ஆக்சிஜன் அளிப்பவர்களாக பெண்கள் உள்ளனர். அவர்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகிறார்கள்.
சமீபத்தில் வந்தே பாரத் ரயிலை ஆசியாவின் முதல் பெண் டிரைவர் சுரேகா யாதவ் இயக்கினார். சியாச்சினில் முதல் பெண் அதிகாரியாக கேப்டன் ஷிவா சவுகான் பணியமர்த்தப்பட்டார். நாகாலாந்தில் முதல் முறையாக எம்.எல்.ஏ.க்களாக 2 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆஸ்கர் விருதை பெண் இயக்குனர் வென்றுள்ளார்.
இந்தியாவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்தவர் உயிரை காப்பாற்ற தங்கள் உடல் உறுப்பை தானம் செய்ய முன் வருபவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள்.
உறுப்புகளை பெற்றவர்கள், தானம் செய்தவர்களை கடவுளாக பார்க்கிறார்கள். பஞ்சாப்பில் சுக்பீர்சிங்-சுக்பீத் கவுர் தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தை 39 நாட்களில் உலகை விட்டு பிரிந்தார். அந்த மகளின் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.